ஐ.சி.சி. ருவென்டி-20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது. கிரிக்கட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இத்தொடரில் மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் டெஸ்ட் அந்தஸ்துப் பெற்றுள்ள 9 நாடுகளுடன் புதிதாக ஸ்கொட்லாந்து, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் பங்கேற்கின்றன.
இந்த 12 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 27 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் முதலில் நடைபெறும் 24 லீக் போட்டிகளில் 12 அணிகளும் கலந்துகொள்ளும். லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.
இந்த சுற்றுக்குத் தெரிவாகும் 8 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டியிடும். சுப்பர் 8 முடிவில் 2 பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.
இன்று நடைபெறும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஐ.சி.சி. ருவென்டி-20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இந்திய அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.