அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இரா.தங்கவேல் தெரிவித்தார்.
கட்டபுலாத் தோட்டக் கீழ்ப்பிரிவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
அரசாங்கம் பயங்கரவாதத்தை அடக்கி ஒடுக்கி விட்டதாக அமைச்சர்கள் மார்தட்டி மகிழ்ச்சியில் குதூகலித்துக் கொண்டிருக்கின்றனர். அரசியல் தலைவர்களையும் மிஞ்சும் வகையில் அதிகாரிகள் எதிர்க்கட்சியினர் மீது குற்றஞ் சுமத்துவதில் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு வழியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனால் அந்த வெற்றியை காரணங்காட்டி காலத்தையும் நேரத்தையும் வீணடிப்பது விவேகமற்ற செயல். அத்துடன் தூர நோக்கின்றி கேளிக்கைகளை முன்னெடுப்பது பாமர மக்கள் மத்தியில் நச்சு விதைகளை விதைப்பது போன்றது. இது ஆரோக்கியமானதாக அமையாது. மாறாகப் பாரதூரமான விளைவுகளுக்கே வழிவகுக்கும்.
அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்த இந்த வேளையில் இந்நாட்டில் இன மோதல்கள், பாரிய யுத்தம், ஆயுதக் கலாசாரம் என்பன ஏற்பட ஆணிவேராக அமைந்த தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப உடனடி அரசியல் தீர்வு காண வேண்டியது தலையாய கடமை.
அந்தக் கடமையிலிருந்து தவறி காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் வகையில் செயற்படின் முன்னொருபோதும் ஏற்படாத அளவில் பாரிய இனப்பிரச்சினை வெடித்து இந்நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதியையும் கூடப் பறிகொடுக்க நேரிடும்.
இன்று சாதாரண தமிழ், முஸ்லிம் மக்கள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போதும் அன்றாட அலுவல்களுக்காக வெளியில் நடமாடும் போதும் மானசீகமாக எதிர்நோக்குகின்ற தொல்லைகளும் துயர்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்நாட்டில் விதைத்த இனத்துவேச விதைகளினையே அண்மைக் காலத்தில் அறுவடை செய்யப்பட்டது என்ற உண்மையை ஆட்சியாளர்கள் நெஞ்சில் நிலைநிறுத்தி மீட்டிப் பார்த்து தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாக நடமாடும் வகையில் கௌரவமான அரசியல் தீர்வைக் காணவேண்டும்.
அத்துடன், பேரினவாதிகள் சந்தர்ப்பத்தைச் சாதகமாகக் கொண்டு இனவெறியைத் தூண்டும் வ?யில் தமிழ் மக்களை அவமதித்து அவதூறு செய்கின்ற அருவருக்கத்தக்க அனைத்துச் செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு, அரச படையினர் வெற்றி கொண்டது ஆயுதமேந்திப் போரிட்ட புலிகளையே அன்றித் தமிழ் பேசும் மக்களையல்ல என்ற உண்மையை ஒவ்வொரு பெரும்பான்மையின மக்களும் உணரும் வகையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.