நீதியின் முன் அனைத்து இனமும் சமம் : ஓய்வு பெறும் பிரதம நீதியரசர்

06srilanks_chief_judge.jpgநீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை.” இளைப்பாறிச் செல்லும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்களுக்கு, உகந்த நீதி மற்றும் சமூக கட்டமைப்புகள் மூலம், சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்காவிட்டால் தமிழ் மக்களிடையே ஆயுத மோதலுக்குப் பதிலாக மற்றொரு கிளர்ச்சி வெடிக்கும் சாத்தியம் உள்ளது.

சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம்” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நேற்றுடன் விடைபெறுவதை ஒட்டி அவர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் போதிய ஆய்வோ, யோசனை செய்தோ இயற்றப்படவில்லை. இந்திய அரசமைப்பைப் பார்த்து அந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவுக்கு இது சரியாக இருக்கலாம். இலங்கைக்கு அது ஏற்புடையதல்ல.

பொலிஸ் அதிகாரத்தை பரவலாக்கினால் பொலிஸ் மா அதிபர் அதிகாரம் அற்றவராகவே இருப்பார். மாகாணங்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்துவிட்டு அவர் சும்மா இருக்க வேண்டும்.

இதேபோல் காணி விவகாரமும் உயர்வானது. மொத்தத்தில் 13 ஆவது திருத்தம் பல ஓட்டைகளைக் கொண்டது. இலங்கையில் மாகாணங்களுக்கு சரியான எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. எல்லைகள் வரையறுக்காமல் எதனையும் செய்யமுடியாது.

சரியான முறையில் எல்லைகள் வகுக்க முறையேதும் இல்லை.

நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான். நான் இனவாதியாக இருக்கவில்லை. இலங்கையன் என்றே செயற்பட்டேன். சகல மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அப்படி பாதுகாக்கப்படாவிட்டால் மோதல்கள் எதிர்காலத்தில் ஏற்படலாம். நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களை நடமாட அனுமதிக்க வேண்டும். இல்லையேல் சர்வதேசத்தின் கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டி வரும்” என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • சாந்தன்
    சாந்தன்

    சரத் சில்வா நீதிமன்ற வளாக திறப்பு விழாவில் அண்மையில் சொன்னது…..

    “வன்னி இடம்பெயர் மக்கள் தங்கவைக்கப்பட்ட ‘நிவாரண கிராமங்களை’ பார்வையிட்டேன். அங்குள்ள மக்களின் அவதியையும் வேதனையையும் என்னால் சொற்களால் விபரிக்க முடியவில்லை. நாம் இந்நாட்டில் எல்லோரும் ஒரே இனம் இங்கு சிறுபான்மையென்றோ பெரும்பான்மை என்றோ இல்லை எனச் சொல்வது கடைந்தெடுத்த பொய்யாகும்”

    ”செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த வன்னி மக்கள் ஸ்ரீலங்காவின் சட்டங்களிற்கமைய எந்த ஒரு நீதியையும் எதிர்பார்க்க முடியாது. நாட்டின் சட்டங்கள் இவர்களில் எந்த அக்கறையையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இதற்காக அதிகாரிகள் என்னை தண்டிக்கலாம்.”

    அண்மையில் சென்ற அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதியின் சொற்களால் புலம்பெயர் புலிப்பினாமிகளின் கபடநாடகம் வெளியில் வந்து சந்தி சிரித்தது !!!!!! இப்போ பார்த்தால் சொந்த நாட்டின் பிரதம நீதியரசர் காங்கிரஸ் பிரதி நிதியையே கவிட்டு விட்டார்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    பொலிஸ் மா அதிபர் சும்மா இருக்கவேண்டும் என்பதற்காக மக்களுக்கு அதிகாரம் மறுக்கப்பட வேண்டும் என்கிறார் இவர். பதிலாக அதிகாரத்தை பரவலாக்கி பொலிஸ்மா அதிபரை வீட்டுக்கனுப்பலாம் அல்லது வேறு பிரஜோசனமான ஒரு வேலையை கொடுக்கலாமே?

    நீதியில் சிங்கள பௌத்தம் என ஒன்று இல்லை. எல்லா இனமும் சமயமும் ஒன்று தான் என்கிறீர்கள். அப்போ இன்னும் ஏன் ஸ்ரீலங்கா அரசமைப்பில் பெளத்த மதத்துக்கு முன்னுரிமையும் பெளத்த சாசனத்தை காப்பாற்றும் பொறுப்பும் வழங்கப்பட்டிருக்கிரது என விளக்கம் சொல்வாரா?

    Reply
  • msri
    msri

    கனம் நீதிபதி அவர்கள் பரிந்துரைக்கின்ற> நீதி+நேர்மை ஐனநாயகம்+சமத்துவம்> என்பன இலங்கையில் நடைமுறையில் இல்லை! தமிழ்மக்களைப் பொறுத்தவரை இது வெறும் ஏட்டுச் சுரைக்காயே!

    Reply
  • msri
    msri

    அரசமைப்பின் 13-வது திருத்தம் பற்றி> நீதிபதி அவர்கள் சொல்வதை> டக்கிளசு- சங்கரியார்> போன்ற “மகிந்த ரசிகர்கள் குளாம்” கூட்டத்தினர் கவனத்தில் கொள்வீர்களாக!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஓய்வு பெறும் பிரதம நீதியரசர், இலங்கையில் தற்போதுள்ள நிலைமைகளை அடிப்படையாக வைத்து தனது தலையாய கருத்துகளை வைத்திருப்பது பாராட்டத் தக்கது. அந்த வகையில் அரசும் இப்படியானவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து சட்டத் திருந்தங்களை மேற்கொள்ள முன் வர வேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக இரத்தம் சிந்திய போராட்ட வரலாறின் பின்னாவது வைக்கப்படும் தீர்வானது ஏதோ எடுத்தேன் கவிழ்த்தேன் என்றிலில்லாது, ஏற்கனவே இருந்த இனப் பாகுபாடுகளைக் களைந்து ஒரு தீர்க்கமான தீர்வாக இருக்க வேண்டும். இலங்கை என்பது ஒரே நாடு, எல்லா மக்களும் இலங்கை மக்களே என்ற நிலையை அரசு வைக்கும் தீர்வே அந்த மக்களின் மனதில் தாமாக தோன்ற வைக்க வேண்டும். கடந்த காலங்களில் விட்ட அரசியல் தவறுகளை திருத்தி அதிகாரங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளித்து, எனியும் ஒரு கசப்பான போராட்ட அனுபவங்கள் ஏற்படாதவாறு, அரசு நடந்து கொள்ள வேண்டும். அதற்கு சட்டங்களிலுள்ள ஓட்டைகளையும் களைய ஏனைய அரசியல்க் கட்சிகளினதும் ஆதரவையும் அரசு திரட்டி ஆவன செய்ய வேண்டும். மொத்தத்தில் இலங்கையில் எனியும் ஒரு இனம், போராட வேண்டிய நிலை ஏற்படுவதும் ஏற்படாமல் போவதும், மகிந்தவின் தலைமையிலுள்ள தற்போதைய அரசின் கைகளிலேயே தங்கியுள்ளது.

    Reply