பொசன் நிகழ்வுகள் அநுராதபுரம், மிஹிந்தலையில் இன்று ஆரம்பமாகின்றன. மூன்று தினங்களாக நடைபெறவுள்ள பொசன் நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுர மாவட்ட செயலாளரும் பொசன் குழுவின் தலைவருமான எச்.எம்.கே. ஹேரத் தெரிவித்தார்.
பொசன் நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவையை வழங்க இலங்கை போக்குவரத்துச் சபை இணக்கம் தெரிவித்துள்ளது. இதுதவிர மலசலகூட வசதிகளை வழங்க அநுராதபுரம் மாநகர சபையும் நீர் சுத்திகரிப்பு வேலைகளை மேற்கொள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணங்கியுள்ளன.
இதேவேளை, பொசன் நிகழ்வுகள் நடைபெறும் மூன்று தினங்களிலும் அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை நகரங்கள், பௌத்த விகாரைகள் என்பவற்றை மின் விளக்குகளால் அலங்கரிப்பதற்குரிய ஏற்பாடுகளை இலங்கை மின்சாரசபை மேற்கொண்டுள்ளது. நிகழ்வுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அநுராதபுரம் பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.