பிரபாகரனே!
உன்னைப் பற்றியும் உனது போராளிகளைப் பற்றியும் உனக்கோர் கடிதம் எழுத வேண்டும் என எண்ணி எத்தனையோ தடவைகள் முயற்சித்துள்ளேன். உனது மனத்திடல், வீரம், விவேகம், தந்திரம், உன்னால் வளர்க்கப்பட்டு வந்தவர்களின் பண்பு, பணிவு, ரகசியக்காப்பு, மரியாதையான பேச்சு பற்றி மட்டுமல்ல, உன்னிடம் தெரிந்த குறைகள் பல பற்றி எல்லாம் எழுத வேண்டும் என எத்தனித்த போதெல்லாம் மாற்றுக் கருத்துக்கும் மரண தண்டனையே நியதி என்ற உனது சட்டத்தை அறிந்த நான் எனது வாழ்நாளை நீட்டிக்க விரும்பி உயிர் பேராசையால் பேனாவை மூடிக்கொண்டேன். ஆனால் இன்று என்னையும் அறியாமல் உன் பற்றிய செய்தி என்னை எழுதத் தூண்டிவிட்டது.
நீ இறந்துவிட்டாயாம் என்பது அரசியல் மட்டங்களில் உறுதி செய்யப்பட்ட செய்தி. அடிமட்ட ஈழத்து மக்களில் இருந்து அறிவு ஜீவி இலங்கைத் தமிழன் வரை நம்ப முடியாத, நம்பக் கூடாத, நம்பியும் நம்பாத செய்தியாகவே இருக்கின்றது அது. என்றாலும் கூட நீ இருந்தாலும் நலமே. ஏனெனில் எந்த ஒரு உயிரும் இயற்கை தவிர மனிதனால் அழியக் கூடாதென்பதே என் விருப்பம். என்றாலும் நீ இல்லை என்றாயின் நீ இல்லாத இவ்வேளையில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்களையே உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
நீ இறந்தாய் என்ற செய்தியை இல்லை என்று சொல்பவர்கட்கும், சொல்லப்படுபவர்கட்கும் நீ இறந்தாய் தான் என்ற உண்மை நன்றாகவே தெரியும் என்பது உனக்குத் தெரியுமா? மற்றவரை முட்டாள் ஆக்குகிறோம் என்ற பெருமையில் தாங்களே தங்களை முட்டாள்கள் ஆக்கிக் கொண்டும், ஏமாற்றிக் கொண்டும் திரியும் இவர்கள் பூட்டிய அறைக்குள் கிடந்து விம்மி விம்மி அழுகிறார்கள் என்பதையும் நீ அறிவாயா?
தற்கால, எதிர்கால அரசியல் ஆதாயம் கருதி உன் மரணத்தையே மறைப்பவர்கள் மத்தியில், உனது மரணமென்பதே பொய்ச் செய்தி என்ற நினைப்பில், இந்தச் செய்தியை அலட்டிக் கொள்ளாத உனது அப்பாவி உறவுகளும் உள்ளார்கள் என்பதையும் நீ அறிவாயாக. பாவம் அவர்கள் கணணி பற்றியோ, இணையத்தளங்கள் பற்றியோ, மின் அஞ்சல் பற்றியோ, மாற்று ஊடகங்கள் பற்றியோ எதையும் அறிந்திராத அப்பிராணி சனங்கள். தங்களுக்கு என்று தங்களால் ஏற்படுத்தப்பட்ட ஊடகச் செய்திகளை மட்டுமே கேட்டும், பார்த்தும் பழக்கப்பட்ட ஆட்டுமந்தை கூட்டங்களான அவர்கள் உன் மரணச் செய்தியை கூட ஒரு கேலிச் செய்தியாகவே கேட்கிறார்கள்.
நீ ஒன்றே ஒன்று செய்திருக்க வேண்டும். நீ இறந்த பின் அம்மக்கள் உனக்காக என்ன செய்திருப்பார்கள் என்பதைக் காண்பதற்காய் நீ முன்பே ஒரு முறை இறந்ததாக ஒரு ஒத்திகை நாடகம் நடத்தியிருக்க வேண்டும். அப்போது நீ அறிந்திருப்பாய் உனது மக்களின் முட்டாள் தனத்தையும், சந்தர்ப்பவாதத்தையும். சரி தான் நான் இறந்தால் இவர்கள் என்ன தான் செய்திருக்க வேண்டும் என்று தானே நீ கேட்கிறாய்? என்ன இப்படிக் கேட்கின்றாய். செய்தி கேட்ட நிமிடமே ஈழத்துத் தமிழன் வாழ்வு நிமிடத்தில் ஒரு கணமேனும் ஸ்தம்பித்திருக்க வேண்டாமா? நீ குண்டு கட்டி தன்னை மாய்த்த சமூகத்தில், நீ உயிர் வாழ வேண்டி தீய்க்குளித்து மாண்ட சமூகத்தில், உன்னைப் பாதுகாக்க வேண்டி பட்டினி விரதமிருந்த சமூகத்தில், ஊர்கூடி தேர் இழுத்தது போல் பாதை மறித்து தவமிருந்து போராட்டம் நடத்திய சமூகத்தில் நீ இறந்தாய் என்ற செய்தி கேட்டவுடன் துடித்து, வெடித்து உயிர்துறக்க யாரும் இருக்கவில்லையே. இப்போதாவது தெரிந்ததா இவையெல்லாம் அரிதாரம் பூசாமல் அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம் என்று.
உனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியும்.
உன்னை கிருஸ்ணனின் அவதாரம், சூரியக் கடவுள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது என்ன சொல்கிறார்கள்? கடவுளுக்கு மரணம் ஏது என்கிறார்கள். உன் படம் பதித்த பதாதைகள் ஏந்தி பாதை மறித்து ஊர்வலம் சென்ற புலம்பெயர் வாழ்வுகள் உன் மறைவு கேட்டு என்ன செய்தார்கள்? ஒரு கண்ணீர் அஞ்சலிக் கூட்டம் கூட்டினார்களா? ஒரு மௌன ஊர்வலம் போனார்களா? இல்லை ஒரு சோககீதப் பாடல் தான் ஒலிபரப்பினார்களா?
இந்த 27 வருடங்களில் உனது இயக்கத்தில் இருந்தவர்கள் எவரேனும் இறந்தால் கடையடைப்பு, கர்த்தால், கண்ணீர் அஞ்சலி, கறுப்புக்கொடி என்று எத்தனை புதினங்கள் செய்வார்கள். ஆனால் இயக்கமே அடியோடு அழிந்துவிட்டது என்ற செய்தி கேட்டும் ஏன் இவர்கள் எதுவும் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்று கேட்க நீ இல்லை என்ற தைரியம் அது என்பதை நீ அறிவாயா?
உன் இயக்கத்தில் மூன்றாம் தரத்து தளபதி இறந்தாலே 3 நாட்களுக்கு முகாரி பாடி வசூல் செய்யும் புலத்து தொலைக்காட்சிகள், நீ முதல் தலைவன் இறந்த செய்தி கேட்டு என்ன செய்தார்கள்? அட உன் இறப்பு செய்தியைத் தான் அவர்களால் நம்பமுடியவில்லை அதை விட்டுவிடு. உன்னோடு கூடவே இருந்த உனது முதல்தர, அடுத்தகட்ட தலைவர்கள் எல்லாரும் தான் இறந்துவிட்டார்கள் என்று நம்பியவர்கள், அவர்களுக்காகவேனும் ஒரு நிமிடம் சோககீதம் பாடாததென்ன. கருணாவின் துரோகத்தை சுட்டிக்காட்ட குத்திக் காட்டும் பாடல்களைத் தேடிப்பிடித்து ஒலிபரப்பியவர்களுக்கு உனக்காக ஒலிபரப்ப, உன்னைப் பற்றி புதுவை இரத்தினம் எழுதிய ஒரு பாடலாவது கிடைக்காமல் போனதேன்?
மாவீரனென்றும், மாமனிதனென்றும், வீரவேங்கையென்றும் பட்டங்கள் கொடுத்த உனக்கு எந்தப் பட்டமுமே இவர்களால் சூட்டமுடியாத அளவுக்கு இருந்தும் இல்லாத, இல்லாமலும் இருக்கும், கேள்விப் பொருளாகி விட்டாயே நீ.
மாவீரர் உறங்குவதற்கு கட்டிய கல்லறைகளையே கலைக்கூடமாக அழகியல் தன்மையோடு அமைத்தவன் நீ. உனக்கோர் கல்லறை தான் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரு மண்ணறை கூட கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது தான் நெஞ்சம் கனக்கிறது.
உன்னால் மலரப்போகும் தமிழீழத்துக்கு தேசியகீதம் அமைப்பது யார் என்பதில் ஈழத்துக் கவிஞர்கட்கும் வைரமுத்துவுக்கும் இடையில் ஒரு இழுபறிச் சண்டையே நடந்ததாம். விதியின் விளையாட்டைப் பார்த்தாயா? உனக்கொரு இரங்கல் பா கூட எழுத முடியாமல் போய்விட்டது அவர்களால். எழுதக் கூடாது என்பது அவர்கள் முடிவல்ல. எழுதக் கூடாது என்பது உன்னால் வளர்க்கப்பட்டவர்களின் கட்டளை. உனக்கேற்பட்ட நிலை கண்டு நீ எதிரி என்று நினைத்தவர்களே இளகி உடைந்து நிற்கும் போது இவர்கள் மட்டுமேன் இப்படி கல்லாய் நிற்கிறார்கள். உனக்காக ஒரு இரங்கல் பா எழுதவென்று மூளைநிறைந்த வரிகளோடு, மூடிய பேனா வெடிக்கும் தறுவாயில், முலை சுரந்த தாயின் வலி போல உனக்காக எழுதவென்று நடுநிலை எழுத்தாளர் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீ அறிக.
நீ நல்லவனா? கெட்டவனா? நீ செய்ததெல்லாம் சரியா? தவறா? என்ற ஆய்வின் அடிப்படையில் நான் இதை எழுதவில்லை. நானும் நீயும் ஓரினம் என்பதால், மனிதம் பற்றிப் பேசவே இதை எழுதுகின்றேன்.
நீ வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு தம்பியாகவும், அண்ணனாகவும், செஞ்சோலை சிறார்களுக்கு தந்தையாகவும், புலம்பெயர் குழந்தைகளின் மாமனாகவும், ஏழை எளியவர்களின் மகனாகவும் மட்டுமல்ல, எங்கள் தேசியத் தலைவன் என்றும் மதிக்கப்பட்டவன். அப்படிப்பட்ட உனது இறுதி ஊர்வலம் எப்படி நடந்திருக்க வேண்டும். புலிக்கொடி போர்த்திய உன் உடல் பேழையை, உன் உயிர் தோழர்கள் தம் தோள்களில் சுமந்து வர, வெள்ளைப் புறாக் கூட்டம் போல் செஞ்சோலைச் சிறார்கள் முன்னே வர, நீ வளர்த்த போர் வீரர்கள் நேர் பார்வையும் நிமிர்ந்த நெஞ்சுமாய் அணிவகுப்பு செய்து வர மங்கல கீதத்தை மகளிர் படையினர் பாடிவர, மாணவ மாணவியர் மலர்கள் தூவிவர, மாவீரன் பிரபாகரனே, எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் தேசியத் தலைவனே போய் வா. நீ சாந்தி பெறு என்று சொல்லி தமிழ் மக்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைக்கப்பட வேண்டிய உன் இறுதி ஊர்வலம் இப்படியா நடந்திருக்க வேண்டும்.
அப்பா என்று சொல்லியழ மகளில்லை, கொள்ளிவைத்து கடமை செய்ய மகனில்லை, மார்பில் வீழ்ந்தழ மனைவியில்லை, என் மகனே என்று சொல்லியழ தாய் தகப்பன் இல்லை, தம்பி என்று சொல்லியழ சகோதர சகோதரியில்லை, மாமாவென்றழ மருமக்களில்லை, ஏன்………… இவன் என் தலைவன் என்று ஏற்றுக் கொள்ள ஒரு தடி மகனேனும் துணிவுடன் முன்வரவில்லை. இப்படி எதுவுமே இல்லாமல் அல்லவா நீ ஏகபிரதிநிதிப்படுத்திய மக்கள் உன்னை அனுப்பி வைத்தார்கள். எத்தனை மரணங்களுக்கு நீ உரிமை கொண்டாடியிருப்பாய். உரிமை கொண்டாடப் படாத, அநாதைப் பிணமாக எரிக்கப்பட்ட முதல் தேசியத் தலைவன் நீ ஒருவனாகத் தான் இருப்பாய்.
உன் மறைவுக்குப் பின் அழுவதைப் போலவும் நடிக்கிறார்கள். நடிப்பதைப் போலவும் அழுகிறார்கள்.
இந்த வேளையில் நீ மட்டும் மீண்டும் வந்தால் எதிரியாய் நிற்கும் உன் தமிழ் மக்கள் நிலை கண்டு என்ன சொல்வாய் தெரியுமா? என் மக்கள் பட்டதெல்லாம் போதும். இனியும் இழப்பதற்கு எதுவுமில்லாத அவர்களை விட்டுவிடுங்கள். என் பெயர் சொல்லி பிழைப்பு நடத்த என் மக்களை பயன்படுத்தாதீர்கள் என்பாய். அதிலும் இந்த தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடம் நீ கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு. அவர்களிடம் நீ கேட்டிருப்பாய், கோப்பெருந்தேவியின் சிலம்பல்ல கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பென்று வாதாடிய கண்ணகியிடம் ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுத் தன்னை குற்றமற்றவன் ஆக்கிக் கொள்ளத் துடித்த பாண்டிய மன்னனைப் போல் இறந்த உன் உடல் பற்றி வைகோவும், நெடுமாறனும் எழுப்பும் சந்தேகங்களும், கேள்விகளும் சின்னப்பிள்ளைத் தனமானது என்றிருப்பாய். இறந்த உடலின் கண்கள் ஒரு தடவை முடியிருந்ததென்றும் மறுதடவை திறந்திருந்ததென்றும் சொல்கிறார் வைகோ. உனது கழுத்துக்கு மேற்பட்ட பகுதி பொருத்தப்பட்டதாம் என்கிறார் நெடுமாறன். உனது உடலொன்றும் மேடம் ருஸாட் மியூசியத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மெழுகுச் சிலையல்ல என்பதையும், நீ சிங்கள அரசின் எதிரி, அவர்கள் கையில் அகப்பட்ட உன் உடலை ராஜ மரியாதையுடன் பாதுகாத்திருக்க மாட்டார்கள் என்பதையும், கால் நூற்றாண்டுக்கும் மேலாக உன் காலடித் தடத்தைக் கூட காண முடியாத அளவுக்கு அவர்கள் கண்களில் விரல்விட்டு ஆட்டிய உன் உடல் கிடைத்தவுடன் அதை எப்படி எல்லாம் பந்தாடியிருப்பார்கள், அதில் என்னென்ன சேதமெல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதைக் கூட அறியாத அரசியல் வியாபாரிகளின் கவலை என்ன தெரியுமா? இனி என்ன ஆவான் இலங்கைத் தமிழன், தமிழனுக்கு என்றொரு தனி நாடே இனியில்லையா? என்பது தான். ஈழத்தமிழர் உயிர்கொடுத்து தனிநாடு பெறவேண்டுமாம். அதில் இவர்கள் பெருமை கொள்ள வேண்டுமாம். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உயிர்ப்பலி கொடுக்கப் பண்ணியவர்களே ஏன் உங்கள் நாட்டில் எட்டுக்கோடி தமிழர்களில் எங்கள் தொகை தமிழர்களை இழந்தேனும் ஒரு தனித்தமிழ் நாட்டை அமைத்துக் கொண்டு இழந்த இடத்துக்கு எங்களை சேர்த்துக் கொள்ளலாமே. அதை விடுத்து என் மக்கள் நெருப்பில் நீங்கள் ஏன் குளிர்காய விரும்புகிறீர்கள் என்று நீ மீண்டும் வந்தால் கட்டாயம் கேட்பாய்.
உன்னோடு சக கருத்து முரண்பாடு உண்டென்ற போதிலும், இன்று வரை உன்னில் சிறு மரியாதையையும் நம்பிக்கையையும் வைத்திருந்தேன். உன்னில் இருந்து கருணா பிரிந்து போனதில் இருந்து இதுவரை நீ எதுவித கருத்தும் சொல்லவில்லை. இருந்தும் உனது ஊதுகுழல்களும், ஊழியர்களும் பேசியவற்றுக்கு நீ எந்த மறுப்பும் கூட சொல்லவில்லை. சந்தர்ப்பமும், நிர்ப்பந்தமும் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஒரு வேளை ஒரு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் மண்டைக்குள் அடைத்து வைத்திருக்கும் மலங்களை அகற்றிச் சுத்தம் செய்வாய் என்றிருந்த சிறு நம்பிக்கை கூட கைகூடாமல் போய்விட்டதே என்பதே என் கவலை. உனக்கொன்று தெரியுமா? தவறு செய்பவர்கள் எல்லோருமே கிழக்கு மாகாணத்தான் என்பது தான் உனது ஊழியர்களின் நம்பிக்கையும், பரப்புரையும். இப்போது KP கூட கிழக்கானாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். யார் கண்டார் நாளடைவில் தேசியத் தலைவர் பிரபாகரன் கூட கிழக்கான் தானென்று உன்னைக் கூட இவர்கள் சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
நீ இறந்தாய் என்ற செய்தி கேட்ட நிமிடம் தொட்டு, தாயைப் பிரிந்த கன்றுகள் போல போகுமிடம் தெரியாமலும், நடந்த உண்மை அறியாமலும், வாடிய முகமும் சோர்ந்த நடையுமாய் அலைந்து திரிகிறதே ஒரு இளைஞர் கூட்டம். அவர்கள் தான் உன்னை நேசித்தவர்கள், நேசிப்பவர்கள், தமிழீழத்தை கனவில் சுமந்தவர்கள்.
நீ இறந்திருந்தால் மீண்டும் பிறந்து வர முடியாது. ஆனாலும் நீ இறந்திருந்தாலும் கூட இன்னும் பலமுறை இறப்பாய். பிறப்பில்லா உனது பல இறப்புகளை இவர்கள் அரங்கேற்றுவார்கள். நீ உயிரோடு இருப்பாய் ஆயின் தங்கள் பதவிக்கும் பணத்துக்கும் ஆபத்தெனும் போதிலெல்லாம் உன்னைச் சாகடிப்பார்கள். இனிவரும் காலங்களில் நீ வந்த வாகனம் மோதி வெடித்துச் சிதறி சின்னாபின்னமாக உன் உடல் உருக்குலையும், நீ ஓட்டிவந்த படகு நீரில் மூழ்கி உன்னை மீன் விழுங்கும்………… இப்படிப் பற்பல கோணங்களில் சாகடிக்க தமிழ்நாட்டு அரசியலில் தான் சாத்தியம் உண்டு.
நீ எத்தனை தரம் இறப்பினும் அத்தனை தடவைகளிலும் உன் ஆத்மா சாந்தியடைய உன் விசுவாசிகளுடன் சேர்ந்து பிரார்த்தித்து உனக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தும் இவன்.
பார்த்திபன்
அமிர்தலிங்கத்தை போட்டுத் தள்ளிய பிரபா அவருக்கு அஞ்சலி நிகழ்வுகள் கூட தாயகத்தில் நடைபெறக் கூடாது என்று தடை உத்தரவு போட்டார். ஆனால் இன்று பிரபாகரனின் சந்தர்ப்பவாத ஆதரவாளர்களே, பிரபாகரனுக்கு அஞ்சலி செய்யக் கூடாது என்று த(டா)டை போட்ட கொடுமை. எல்லாம் காலத்தின் கோலம்.
தராகி
இந்தக் கட்டுரையை பார்த்தால், கிருஷ்ணப் பிள்ளை மற்றும் ராஜசிங்கம். ஜெயதேவனின் குரல் போலுள்ளதே!, பின்னால், பிள்ளையானின்(சந்திரக்காந்தன்) தலையும் தெரிகிறது போலுல்லதே!.
Colvin
Prabaharan is dead.
Anti-LTTE political experts are more worried about his death than the LTTE gangsters. He is threatning them in their dreams.
They even will give life to the dying LTTE to do their dirty politics.
What else can these people and websites do if LTTE is no more existing?
Big experts and small experts can discuss whether LTTE exists or not. In any case their political life is bound up with the fate of dead Prabaharan and dying LTTE.
Perhaps they can start a discussion whether Prabaharan went to the heaven or hell.
BUT TAMIL PEOPLE ARE MOVING WITHOUT THESE EXPERTS.
thurai
இருந்தாலும் ஆயிரம் ஒய்ரோ இறந்தாலும் ஆயிரம் ஒய்ரோ. புலிகளின் உலகில் தலைவ்ரின் இறப்பிற்கு இடமேயில்லை. தமிழீழ தாகம் தணியப் போவதுமில்லை. இறைச்சிக்கடையை கழுவி கந்தன் கோவில் வைத்திருக்கும் புலத்துத் தமிழரின் கூத்துக்கள் அனைத்துமே கோமாளிக் கூத்துத்தான்.
துரை
Rajan
ஓன்று மட்டும் தெட்ட தெளிவாக தெரிகிறது.. தழிழ்நலன் விரும்பிகள்.. இப்படியான வெப் சைட் கள் மூலம் பிரபாகரனில் இருக்கும் கோபத்தை தீர்த்து கொல்லுறாங்க… சந்திரனை பார்த்துநாய் குரைக்குது…. உங்களால் இது தான் செய்ய முடியும். பாவம் நீங்க டொமைனுக்கு காசு கொடுத்து உங்கள் ஆறுதலை தேடி கொள்ளுங்க….. தமிழன் ஏமாளி இல்லை ..
நண்பன்
இருந்தப்போ தினம் ஒரு உயிராவது சாகும். போன பிறகு அது குறைந்து விட்டது. அதுவே விடுதலைதான்.
போராளி
பல நிஜங்களைக் கட்டுரையாளர் புடம் போட்டுக்காட்டியிருக்கின்றார். ஏமாறுபவன் இருக்குமட்டும் ஏமாற்றுபவன் இருந்துகொண்டேயிருப்பான் இதனை யாராலும் மாற்றமுடியாது. எனினும் பிரபாகரன் மரணம் உண்மையானால், அதனை மூடிமறைத்து அதற்க்கும் வேறு காரணங்கள் கற்பிக்க முற்படுபவர்களை கடுகளவேனும் மன்னிக்கமுடியாது.
“நீ இறந்தாய் என்ற செய்தி கேட்ட நிமிடம் தொட்டு, தாயைப் பிரிந்த கன்றுகள் போல போகுமிடம் தெரியாமலும், நடந்த உண்மை அறியாமலும், வாடிய முகமும் சோர்ந்த நடையுமாய் அலைந்து திரிகிறதே ஒரு இளைஞர் கூட்டம். அவர்கள் தான் உன்னை நேசித்தவர்கள், நேசிப்பவர்கள், தமிழீழத்தை கனவில் சுமந்தவர்கள்”.இந்த வார்த்தைகளைப் பார்த்துவிட்டுநான் பின்னோட்டம் எழுதுபோது என்னையும் அறியாமல் எனது கண்ணில் கண்ணீர். இப்படி எத்தனைபேர் உணவின்றி உறக்கமின்றி தமது வேலைகளையும் செய்யமுடியாமல் பித்துப்பிடித்தவர்போல் அலைகின்றனர். பிரபாகரன் உயிருடன் இருப்பார் என்று பத்துவீதம் எனது மனதும் நம்பியும் நம்பாமல் ஒருமூலையில் புலம்பிக் கொண்டிருக்கின்றது. எழுத இன்னும் இருக்கின்றது ஆனால் இத்துடன் முடிக்கின்றேன் காலம் பதில் சொல்லட்டும்.
thevi
நீ இறந்தாய் என்ற செய்தி கேட்ட நிமிடம் தொட்டு தாயைப் பிரிந்த கன்றுகள் போல போகுமிடம் தெரியாமலும் நடந்த உண்மை அறியாமலும் வாடிய முகமும் சோர்ந்த நடையுமாய் அலைந்து திரிகிறதே ஒரு இளைஞர் கூட்டம். அவர்கள் தான் உன்னை நேசித்தவர்கள் நேசிப்பவர்கள் தமிழீழத்தை கனவில் சுமந்தவர்கள்”
அந்த வஞ்சனையற்ற இளைஞர்களுக்காய் எனது கண்கள் பனித்தன.
பார்த்திபன்
//ஓன்று மட்டும் தெட்ட தெளிவாக தெரிகிறது.. தழிழ்நலன் விரும்பிகள்.. இப்படியான வெப் சைட் கள் மூலம் பிரபாகரனில் இருக்கும் கோபத்தை தீர்த்து “கொல்லுறாங்க”… Rajan //
சத்தியமாய் தேசம்நெற்றோ அல்லது நாங்களோ பிரபாகரனைக் கொல்லவில்லை. புலன் பெயர்ந்த புலிவால் பிடித்த சில புலத்துப் புண்ணாக்குகளின் அதீத கற்பனைகளும், ஆர்ப்பாட்டங்களும் இலங்கை இராணுவத்தை உசுப்பேற்றி விட அவர்கள் தான் போட்டுத் தள்ளி விட்டார்கள்.
வெள்ளைவாகனன்
சிறிலங்கா இராணுவம் ஒருபிடி பிடித்து தாக்கிய போதுதான் புலிகளின் இராணுவ பலவீனங்களும் போலித்தனங்களும் வெளிப்பட்டன. புலிகள் ஒரு தொடர் நேரடி யுத்தத்துக்கு தகுதியற்றவர்கள் என்பது தெரிய வந்தது. கொரில்லாப் போர்த் தந்திரத்துக்கு மாறும் வல்லமையையும் புலிகள் இழந்து விட்டார்கள் என்பது புரிந்தது. புலிகள் கட்டியிருந்ததெல்லாம் ஒரு மாயமாளிகையே என்பது அம்பலமானது. புலிகளிடம் நீண்டகாலப் போருக்கு உரியவகையான எந்தவித தயாரிப்பும் இருக்கவில்லை யுத்த உபாயங்களும் இருக்கவில்லை என்பது வெளிப்படையானது.
புலிகள் தாங்கள் தமிழீழ முப்படைகள், தமிழீழ பொலிஸ் நிலையங்கள், தமிழீழ நீதிமன்றங்கள், தமிழீழ வங்கி, தமிழீழ சிவில் நிர்வாகம் எனக் காட்டிய பிரமாண்டங்களெல்லாம் சினிமாப் படப்பிடிப்புக்குப் போடப்பட்ட காட்சி செட்டுகள், வேஷங்கள் போன்றவையே என்பது அம்பலமானது. புலிகளின் விமானப் படையைப் பற்றி உலக அதிசயத்தைப் போல் பேசினார்கள். கடைசியாக அவைகள் குண்டுகளைக் கட்டிக் கொண்டு வான வேடிக்கை காட்டிய பறக்கும் தகரப்பெட்டிகள் என்னும் குட்டு வெளிப்பட்டது.
மாவிலாறில் ஓடத் தொடங்கிய புலிகள் கடைசியாக முள்ளிவாய்க்காலில் சரணடைகின்ற வரை ஒரு இடத்தில் கூட அரச படைகளுக்கு முன்னால் புலிகளின் தரைப்படை ஏன் நின்று பிடிக்க முடியாமற் போனது. ஏனென்றால் வன்னியின் பள்ளிக் கூடங்கள் ஒவ்வொன்றிலுமிருந்தும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மிரட்டி விட்டு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான சிறுவர்களைக் கொண்டு கட்டப்பட்டதே புலிகளின் பிரமாண்டமான தரைப்படை. அந்த அப்பாவிச் சிறார்கள் முன்னால்போன போது அரசபடைகளால் சுடப்பட்டார்கள் பின்வாங்கி ஓடிய போது புலித் தளபதிகளால் சுடப்பட்டார்கள் ஆக மொத்தத்தில் பாவம் அவர்கள் சிட்டுக் குருவிகள் போல் செத்து மடிந்தார்கள்.
புலிகளின் தளபதிகளோ அரச படைகள் முன்னேற முன்னேற தாம் மட்டும் தப்புவதற்காக தொடர்ந்து கால் பிடரியில் அடிபட ஓடினார்கள். ஓடினார்கள் ஓடினார்கள் நந்திக் கடலின் ஓரம் வரை ஓடினார்கள. ஒரேயொரு இடத்தில் மட்டும் அவர்கள் முன்னோக்கி நடந்தார்கள். கடைசியாக ஓடவழியில்லாமல் போனபோது கைகளைத் தூக்கியபடி அரசபடைகளை நோக்கி முன்னே நடந்து போய் காலடியில் விழுந்தார்கள்.
சி லங்கா அரசின் எத்தனையோ நவீன போர்ப்படகுகளையும் பல கப்பல்களையும் அடித்து கடலில் மூழ்கடித்த புலிகளின் கடற்படை எப்படி காணாமற் போனது. புலிகளின் கடற்படை ஒரு கள்ளக்கடத்தலுக்கான படையே தவிர வேறோன்றுமில்லை என்பதை பலரும் புரியத் தவறிவிட்டார்கள். அந்தப் படையால் இரவோடிரவாக இரகசியமாக திட்டமிட்டவகையில் எதிர்பாராத வகையான தாக்குதல் மூலம் அரசின் போர்ப்படகுகளை ஆங்காங்கே தாக்கி அளிக்கலாம். அதற்கு மேலாக ஒரு அரசின் முறையான கடற்படையமைப்பை வெல்லும் திறன் ஒரு கள்ளக்கடத்தல் கடற்படைக்கு எவ்வகையிலும் ஏற்படமுடியாது என்பதே இங்கு வெளிப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அரச படைகள் முறையாக தொடர்தாக்குதலை நடாத்திய போது புலிகளின் அத்தனை போலி அமைப்புக்களும் பொலு பொலுவென உலுந்து கொட்டிச் சின்னாபின்னமானதையே கடந்த சில மாதங்களில் நாம் கண்டோம்.
1980களில் பிரபாகரனை சிலர் சேகுவேரா மற்றும் அமில்கார் கப்ராலுடன் ஒப்பிட்டார்கள்… புலிகள் இந்திய இராணுவத்துடன் சண்டையிட்ட போது பிரபாகரனை ஒரு சிலர் மாவோ சே துங் மற்றும் ஹோ சி மின்னுக்கு கொஞ்சமும் சளைக்காதவர் என்றார்கள்… 1990களில் புலிப்பிரச்சாரகர்கள் பிரபாகரனை யசீர் அரபாத்துடனும் மற்றும் நெல்சன் மண்டேலாவுடனும் சமப்படுத்தினார்கள்….. 2000ம் ஆண்டுகளில் புலி ஆதரவாளர்கள் பிரபாகரனை பூமியில் தோன்றிய சூரியதேவன் என தங்களைத் தாங்களே ஏமாற்றி கொண்டாடத் தொடங்கினர்கள்; ……
ஆனால் 2009ம் ஆண்டு அதே பிரபாகரன் கைகளைத் தூக்கியபடி சிங்கள இராணுவ வீரர்கள் முன்னால் சினிமாப் படங்களில் வரும் வில்லன் கடைசியாக கதாநாயகன் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்பது போல சரணாகதி அடைந்தபோதுதான் இவ்வளவு குரூரங்களுக்கும் கொடூரங்களுக்கும் ஒழித்து நின்று தலைமை தாங்கிய பிரபாகரன்…. முப்பதாயிரம் தமிழ் இளைஞர்களைப் பலிக்கடாவாக்கிய பிரபாகரன், மூன்று இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை கேடயமாக வைத்திருந்த பிரபாகரன் கேவலம் எவ்வளவு தூரம் தன் உயிர் மேல் மட்டும் ஆசை கொண்ட ஒரு கோழை, பொய்யன், போலித்தனமான ஆள் என்பது அம்பலமாகியுள்ளது.1974ம் ஆண்டு ஆனி ஐந்தாம் நாளில்; பொலிஸால் சுற்றி வளைக்கப்பட்டு தப்ப முடியாது என்ற நிலை வந்த போது சைனட் அருந்திச் செத்த அந்த மாவீரன் சிவகுமாரனுடன் எவரும் பிரபாகரனை ஒப்பிட வேண்டாம். இந்த 2009 ஆண்டின் மே மாதத்தின் ஒரு நாளில் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பில் அரச படைகளுக்கு எதிராக யுத்த களத்தில் சண்டையிட்டு குண்டடிபட்டு இறந்திருக்கக் கூடிய ஒரு 14 வயது சின்னப்பையனின் அல்லது அவ்வாறே அங்கு இறந்திருக்கக் கூடிய ஒரு சாதாரண சிங்கள இராணுவ வீரனின் காலடித் தூசுக்குக் கூட பிரபாகரன் சமனாக முடியாது. –வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்
Poopalarajah
Congaratulations, Na .Nivan,
Keep writing. Let thousand writers bloom in diaspora and in motherland.
BC
வெள்ளைவாகனன் புலிகளின் பொய் பிரசாரங்கள் மூலம் கட்டப்பட்ட புலிகளின் மாயமாளிகை பற்றி சிறப்பாக எழுதியுள்ளார்.நன்றி.
மாயா
அத்தனை புலி தலைவர்களும் கைகளைத் தூக்காமல், வெள்ளைக் கொடி தூக்காமல் ஆகக் குறைந்தது கூட்டுத் தற்கொலையாவது புரிந்திருந்தால் இன்று உலகமெல்லாம் மாவீரர் நாளென்ன? மாவீரர் ஆண்டாகவே மக்கள் நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்திப்பார்கள். அதை அவர்கள் செய்யாததுதான் புலி ஆதரவாளர்களால் தாங்க முடியவில்லை. செத்தவர்கள் விழாவான மாவீரர் விழாவையே பெரிதாகக் கொண்டாடியவர்களால் , நாளை அந்த விழாவுக்கே களங்கத்தை இவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள் எனும் கோபம் அடிமனதில் தெரிகிறது. முகம் கொடுக்க முடியாது போயுள்ளனர்.
குண்டு வெடிப்புகளையும், சாவுகளையும், தற்கொலைத் தாக்குதல்களையும் புலிகளது செய்தியாக சூடேற்றி வந்த பிரபாகரனது படங்கள் இப்போது மெளனப் படங்களானதன் காரணமாக ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளார்கள். இப்போதும் எங்காவது வெடிக்காதா? என்றே இணையதளங்களில் தேடுகிறார்கள். தமிழரை கொலை வெறி பிடித்த மனநோயாளிகளாக்கிய புலிகளது மெளனம் இடி முழக்கத்தோடு கூடிய மழை நின்றதற்கு ஒப்பானது.
Thirumalai Vasan
அப்பா என்று சொல்லியழ மகளில்லை, கொள்ளிவைத்து கடமை செய்ய மகனில்லை, மார்பில் வீழ்ந்தழ மனைவியில்லை, என் மகனே என்று சொல்லியழ தாய் தகப்பன் இல்லை, தம்பி என்று சொல்லியழ சகோதர சகோதரியில்லை, மாமாவென்றழ மருமக்களில்லை, ஏன்………… இவன் என் தலைவன் என்று ஏற்றுக் கொள்ள ஒரு தடி மகனேனும் துணிவுடன் முன்வரவில்லை. இப்படி எதுவுமே இல்லாமல் அல்லவா நீ ஏகபிரதிநிதிப்படுத்திய மக்கள் உன்னை அனுப்பி வைத்தார்கள்.–
கட்டுரையாளர் இத்தகைய உயர்வுஇகழ்ச்சிக் கட்டுரையில் ஒரு விடயத்தை திட்டமிட்டு தன் சிந்தனைக்கே எடுக்க மறந்துவிட்டார். போர்க்களத்தில் இறுதிநேரம் வரை நின்று மறைந்த அந்தத் தலைவனிடம் (53வது படையணித் தளபதியே இறந்த பிரபாகரனின் உடலைக்கண்டதாகத்தான் குறிப்பிட்டுள்ளார். செய்தி காண்க) காணப்பட்ட வீரம் பற்றி ஒரவரியேனும் குறிப்பிடவில்லை. கட்டுரையின் நோக்கம் அதுவல்லவே. எதிரியின் கையில் பிணமாக அகப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத் தலைவனின் உடலை சின்னாபின்னப்படுத்தி அழித்து மொத்தத் தமிழ் இனத்துக்கும் இழைக்கப்பட்ட அரசின் அராஜகத்தைப் பற்றி ஒரு நிமிடம்கூட சிந்தித்திருந்தால்- கட்டுரையாளர் தனினை ஒரு மானமுள்ள தமிழனாக எண்ணிச் சிந்தித்திருந்தால்- இக்கட்டுரையின் உயிர்கொல்லும் வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்த்திருப்பார். பாவம். அவருக்கு தமிழனின் ஒட்டுமொத்த அவமானத்தையும் அவலத்தையும் விட ஒரு தனி மனிதனான பிரபாகரனின் அழிவில் ஏற்பட்ட சந்தோஷம்தான் பெரிதாகிவிட்டது. இத்தகைய சிந்தனைப் போக்குக்கொண்டவர்களால் புலிகளுக்கு எதிரான மாற்றுக்கருத்தை எவ்வாறு தெரிவிக்க முடியும்? வெற்றுப்பானைகளாக இனியும் இராமல் சாத்தியமான வழிகளையிட்டு சிந்தியுங்கள். யானை இடறி விழுந்தால் தவளையும் பின்னங்காலால் அடிக்குமாம்.
BC
“மானமுள்ள தமிழனாக எண்ணிச் சிந்தித்தி”
” தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அரசின் அராஜகத்தைப் பற்றி சிந்தித்தி”
என்று சொல்லி உசுப்பேத்திதான் இலங்கை தமிழர்கள் இவ்வளவு பேரழிவுகளை சந்தித்துள்ளார்கள்.
Kusumbo
நல்ல சோகந்தோய்த கட்டுரை. பிரபாகரன் உயிருடன் இருந்தபோதும் எமக்கு மகிழ்ச்சியில்லை இறந்தபின்பும் மகிழ்ச்சியில்லை. பிரபாகரா! நீ எம்மைக்கொல்ல அனுப்பிய துப்பாக்கிகள் எம் நெற்றியில் பொட்டிடத்தயாராக இருக்கிறபோதும் எம்மரணம் பற்றி அக்கறைப்படாது உன்மரணத்துக்காய் கண்ணீர்விடுகிறோம். எம்முயிருக்கு எதிரியா இந்தாலும் எம்மால் எதிரியாக எண்ணமுடியவில்லை. எதிரிக்குக் கூட இப்படியொரு மரணம் வரக்கூடாது. மூடத்தனமாய் எம்மக்கள் உன்னை நேசிக்கவில்லை சுவாதித்தார்கள். அதனால்தான் நீ செய்த அட்டூழியங்களையும் தாங்கி எம்கண்கள் உனக்குக் கண்ணீர் மாலை போடுகிறது. எம்மக்களை நேசிப்பதால் உன்னையும் சேர்த்தே நேசிக்க வேண்டியுள்ளது பிரபா!
thevi
எதிரியின் கையில் பிணமாக அகப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத் தலைவனின் உடலை சின்னாபின்னப்படுத்தி அழித்து மொத்தத் தமிழ் இனத்துக்கும் இழைக்கப்பட்ட அரசின் அராஜகத்தைப் பற்றி ஒரு நிமிடம்கூட சிந்தித்திருந்தால்-
புதைக்கப்பட்ட பிணத்தை கூட தோண்டியெடுத்து மிருக வெறியுடன் நடந்த சமூகத்தின் தலைவன் குறித்து அனுதாபப்பட என்ன இருக்கிறது?
BC
//பிரபாகரா! நீ எம்மைக்கொல்ல அனுப்பிய துப்பாக்கிகள் எம் நெற்றியில் பொட்டிடத்தயாராக இருக்கிறபோதும் எம்மரணம் பற்றி அக்கறைப்படாது உன்மரணத்துக்காய் கண்ணீர்விடுகிறோம்.-குசும்பு//
நீங்கள் ஒன்றும் குசும்பு பண்ணவில்லையே! நீங்கள் உண்மையாகவே விரும்பினால் கவலைபடவேண்டாம். தலைவர் வரும் கார்த்திகை 27வரை காத்திருங்கள். பின்பு தமிழர்களை உங்கள் விருப்பபடி போட்டு தள்ளலாம்.
Kusumbo
பி.சி //பின்பு தமிழர்களை உங்கள் விருப்பபடி போட்டு தள்ளலாம்.//
நீங்களும் பிரபாகரனை விட வித்தியாசமாகச் சிந்திக்க மாட்டீர்கள் போலும். போட்டுத்தள்ளுவதே நோக்கமாக உள்ளீர்கள். ஈழத்தமிழ் இனத்தை நேசிக்கும் மனிதநேயம் கொண்ட எவரும் பிரபாகரனின் இறப்பை எப்படியும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். புலிகள் செய்யும் ஒவ்வொரு கொலையையும் எப்படிக் கண்டித்தோமோ? எப்படி அரச படுகொலைகளைக் கண்டித்தோமோ அதேபோன்றே பிரபாகரனின் கொலையையும் கண்டிக்கிறோம்.
chandran.raja
//ஈழத்தமிழ் இனத்தை நேசிக்கும் மனிதநேயம் கொண்ட எவரும் பிரபாகரனின் இறப்பை எப்படியும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்// குசும்பு.
புலிக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டு இதற்குள் “மனிதநேயம்” “தமிழ்இனம்” என்பதும் வேறையா? இதைத்தானே குசும்பு என்பது? கருத்துத்துதானே! காற்றுடன் கலந்துபோவதற்கும் தகுதியுண்டு.
மாயா
புதினம் தட்டுத் தடுமாறி, தலையை சொறிந்து கொண்டு தலைவர் கொல்லப்பட்டதை மழுப்பிக் கொண்டு இன்று சொல்லியிருக்கிறது. காற்று புக முடியாத இடத்திலும் புகுந்து விளையாடக் கூடியவர்களுக்கு தன் தலைவர் இறந்தமை தெரியாமல் போனது, அது சூரியனில் நடந்ததால்தான். பூமியில் மட்டுமே காற்று புகும். அவர் சூரிய புத்திரனல்லவா?
rajan
திரு.நா நிவன் அவர்கட்கு
தங்களது வீரத்தினை தரமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
தாங்கள் பத்திரிகை தர்மத்தினை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவரை நல்லவரோ கெட்டவரோ அவரை மரியாதையுடன் விழித்து எழுத வேண்டும்.
அவரது இறப்பின் பின்னர் அவரைப் பற்றி தூற்றி எழுதி தங்களை வீரனாக காட்ட முயல்கின்றீர்கள். அதற்கு உயிராசை தான் காரணம் என்று சாட்டு வேறு சொல்லியிருக்கிறீர்கள். அவரால் நீங்கள் பட்ட கஸ்ரத்தை எழுதுங்கள். அவர் இல்லாததால் இன்று தமிழர் முகாம்களில் படும் அவஸ்தைகளை எழுதுங்கள்.
மரியாதையின்றி எழுதப்படும் கட்டுரைகளை இந்த வலையமைப்பின் ஆசிரியரும் தவிர்த்தோ அல்லது திருத்தி எழுதப்பணித்து பிரசுரிக்க அனுமதி வழங்க வேண்டும். அல்லது எழுதுபவன் எழுத பிரசுரித்தவருக்கும் பத்திரிகை தர்மம் தெரியாது என்றே போய்விடும்.
திரு.பிரபாகரன் அவர்களும் பெருமளவு மக்களால் மதிக்கப்படும் தலைவர் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
நண்பன்
பாவம் தலைவருக்கு தன் அன்பு உறவுகள் கொடுத்த மரியாதை “எமது மனங்களில் என்ன இருந்தாலும் – நாம் நம்ப மறுத்தாலும் – அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது.”
செய்தியோடு செய்தியாக வந்து செய்தியோடு கரைவதை புதினத்தில் பழமையாகிச் செல்கிறது. இன்று நீ உயிரோடு இருந்திருந்தால் உன்னை பப்பா மரத்தில் ஏற்றி கோஸம் போட்டவர்களை அடையாளம் கண்டிருப்பாய். இன்றும் உன் பெயர் சொல்லி வறுக நினைக்கிறார்களே தவிர உனக்காக ஒரு துளி கண்ணீர் விடுவதைக் கூட இவர்களது சுயநலத்துக்காக செய்யாதிருக்கிறார்கள்.
மாற்றுக் கருத்தாளரைத் துரோகிகளெனச் சொல்லச் சொன்னாய். கொன்று தீர்த்தாய். துரோகிகளே உன்னோடு இருந்ததால் நல்லவர்கள் எல்லாம் துரோகிகளாய் தெரிந்ததோ உனக்கு.
தலைவா வருவாய் ஒருநாள். உலகத்தின் முடிவில் இறந்த அனைவரும் எழுவார்கள் என்று கிறீஸ்தவம் சொல்கிறது. அப்படி ஒன்று நடந்தால் அன்று உன் துரோகிளை நிச்சயம் நீயறிந்து சொல்வாய். சிலவேளை நீயே , அவர்களை மறுபடியும் சுட்டுக் கொல்வாய். ஆனால் உன்னை நம்பி மந்தைகளாக புதுமாத்தளன் வரை வந்த மக்கள் இறுதியில் உன்னை அடித்தே கொல்வார்கள்.