முசலி பிரதேச செயலகப்பிரிவில் இரண்டாம்கட்ட மீள்குடியேற்றம் – 551 குடும்பங்கள் மீள்குடியேற்றம்; பசில் எம்.பி.தலைமை

basil.jpg‘வடக்கின் வசந்தம்’ வேலைத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கான இரண்டாம் கட்ட மீள்குடியேற்றம் மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று நடைபெறுகின்றது.

ஏழு கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட 551 குடும்பங்களைச் சேர்ந்த 2120 பேர் மீள்குடியமர்த்தப்படவுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார்.

அமைச்சரின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மீள்குடியேற்ற வைபவத்தில் வட மாகாணத்துக்கான விசேட செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. பிரதம அதிதியாகவும் அமைச்சர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கெளரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சில் நேற்று நண்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் தகவல் தருகையில் :-

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் ஆலோசனைக்கமைய சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாத பிடியிலிருந்து நாட்டை படை வீரர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் மீட்டெடுத்ததன் மூலமே இடம்பெயர்ந்த இந்த மக்களை வெகுவிரைவில் மீள்குடியமர்த்த கிடைத்தது.

மன்னார், முசலி, பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதமடு, பூநொச்சிகுளம், பண்டாரவெளி, கடலான்குளம், சின்னபுலச்சி, பொட்கேணி, அரிப்பு மேற்கு மற்றும் அரிப்பு கிழக்கு ஆகிய ஏழு கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இன்று மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

பொலிஸ் நிலையம், பாடசாலை திறக்கப்பட்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி கொடுத்த நிலையிலேயே இவர்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். அத்துடன் இந்த மக்களுக்குத் தேவையான மின்சாரம், குடிநீர், வீதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் சிறந்த முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மீன்பிடித் துறையைச் சேர்ந்தவர்களும், விவசாயிகளுமே இங்கு அதிகமாக உள்ளனர். இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்றப்படுவதுடன் இந்த மக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களும், மீன்பிடி வலைகளும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. கூட்டுறவு கடைகள், தபாலகம், மருந்து நிலையம், போக்குவரத்து வசதிகள் இன்றைய தினம் செய்து கொடுக்கப் படவுள்ளது. இதேவேளை அண்மையில் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் வவுனியாவிலுள்ள மெனிக்பாம் மற்றும் பல்வேறு நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா வடக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் புதைக்கப் பட்டுள்ள கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்ட பின்னர் முசலி மக்களை போன்று அந்த மக்களும் வெகு விரைவில் மீள்குடியமர்த்தப்படுவர்.எனவேதான் கண்ணிவெடிகளை துரிதமாக அகற்றுவதை கண்காணிக்கும் பொருட்டு விசேட பிரிவு ஒன்றும் நிறுவப் பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பின்பேரில் பசில் ராஜபக்ஷ எம். பி. இதற்கான சகல நடவடிக்கைகளை அவ்வப்போது முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதலாவது மீள்குடியேற்றம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *