யாழ். மாநகர, வவுனியா நகரசபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னரே இறுதித்தீர்மானம் எடுக்கப்படுமென அக்கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், யாழ்ப்பாண மாநகரசபைக்கும் வவுனியா நகரசபைக்கும் தேர்தலை நடத்துவதற்கான வேட்பு மனுக்கோரல் எதிர்வரும் 18ஆம் திகதிமுதல் 25ஆம் திகதிவரை இடம்பெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த இரு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதா? குறித்து இன்னமும் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை.
3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக முகாம்களில் வாழும் நிலையில் பாரிய உயிர், உடைமை அழிவுகளை தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையிலும் தற்போது தேர்தல் நடத்துவது குறித்து அதிருப்தி அடைந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, இத்தேர்தல்களை ஒத்திவைக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார். சொல்லொணாத் துன்பத்தில் இருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டு இயல்பு வாழ்வுக்குத் திரும்பிய பின்பே தேர்தல் நடத்துவது “ஜனநாயகம்’ என்று அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் தற்போது இந்தியாவில் உள்ளனர். அவர்கள் போருக்குப் பின்னரான நிலைவரம் தொடர்பாக இந்தியத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 9 ஆம் திகதியே டில்லியில் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக கட்சி வட்டாரங்கள் கூறின. அதன் பின்னரே யாழ்.மாநகரசபை, வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது பற்றி இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நாடு திரும்பியதும் ஒன்று கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்று குறிப்பிட்ட அந்த உறுப்பினர், தேர்தலைப் பிற்போடுமாறு விடுக்கப்படும் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில் போட்டியிடும் நிலைமையேற்படலாம் என்று கூறினார்.
இதேவேளை, யாழ்.மாநகர, வவுனியா நகரசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளதாக தமிழக பத்திரிகையொன்றில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியாகியிருந்தது. இரா.சம்பந்தனின் புகைப்படத்துடன் இச் செய்தி வெளியிடப்பட்டிருந்ததாயினும் மேலதிக விபரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.
நண்பன்
போட்டியிட்டு தோற்க வேணும். அதற்காக எனது அனுதாபங்கள்.
palli.
அதுக்கு அரசு அனுமதிக்குமா???
rohan
அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போட்டியிட அனுமதித்து தேர்தலும் ஒழுங்காக நடந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல இடங்களை வெற்றி பெறும் வாய்ப்பே அதிகம் என்று நான் நம்புகிறேன்.
பார்த்திபன்
கூத்தமைப்பினர் தனித்துப் போட்டியிட்டு, தமிழகத்தில் புலியாதரவு அரசியல்வாதிகள் பெற்ற வெற்றிகளை, இவர்களும் பெற வேண்டுமென்று மனமார விரும்புகின்றேன்.