வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதற்கு “சிங்கள பாரம்பரியமே’ அடிப்படைக் காரணம்

06srilanks_chief_judge.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களை தனித் தனியே பிரிப்பதற்கான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியதற்கு காரணம், மாகாணங்களின் சிங்கள பாரம்பரியத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாலேயே என்று பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் பிராந்தியத்தில் இருந்த சிங்கள பாரம்பரியத்தை கவனமாக ஆராய்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். 1987 இல் இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் வட, கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிவித்து 2006 இல் வட, கிழக்கு இணைப்பை உயர் நீதிமன்றம் தனித்தனியே பிரிப்பதற்கு தீர்ப்பை வழங்கியிருந்தது.

ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி. ஆகிய அரசியற் கட்சிகள் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. வடக்கிலும், கிழக்கிலும் சோமாவதி மற்றும் சேருவில போன்ற பௌத்தமத இடங்களை அபிவிருத்தி செய்வதில் சிங்கள மக்கள் மிக நீண்டகாலமாக தொடர்புபட்டிருந்தனர் என்று சரத் என். சில்வா தெரிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பதவிக் காலத்தை பூர்த்திசெய்துள்ள சரத் என் சில்வா இந்தக் கருத்தை தெரிவித்ததாக பி.பி.சி. செய்திச்சேவை குறிப்பிட்டிருக்கிறது.

தொடர்ச்சியாக பல கட்டிடங்களை பிரதம நீதியரசர் வைபவ ரீதியாக திறந்துவைத்துள்ளார். சனிக்கிழமை சேருவில விகாரையை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்; சரத் என். சில்வாவும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் தசாப்த காலங்களாக நெருங்கிய நண்பர்கள் என்று குறிப்பிட்டார். குழப்பமான தருணங்களில் எல்லாம் பிரதம நீதியரசர், ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். சிறைச்சாலையில் இருந்து தனது தாயாரின் இறுதிக் கிரியைக்கு அச்சமயம் இளம் அரசியல்வாதியாக இருந்த மகிந்த ராஜபக்ஷ செல்வதற்கு போக்குவரத்து வசதிகளை அச்சமயம், அரசு சட்டவாதியாக இருந்த சரத் என். சில்வா ஏற்படுத்திக் கொடுத்ததாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *