“வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் அவசர மனிதாபிமான மற்றும் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்ட வைத்திய விடுதி 34 நாட்களில் அதிவிரைவாக நிர்மாணித்து முடிக்கப்பட்டதாகும்’.
என்று உலக சுகாதார நிறுவனத்தின் தேசிய ஆலோசகர் வைத்திய கலாநிதி ஹிரிஸ் சந்திரயக்கண்டாவல தெரிவித்திருந்தார்.
உலக சுகாதார நிறுவன நிதியுதவியுடன் அபிவிருத்திக்கும் நிவாரணத்துக்குமான சர்வதேச அமைப்பால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதியை திறந்துவைத்துப் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி தயாளன் தலைமையில் நடைபெற்ற விடுதி திறப்பு விழாவில், பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அவர், மேலும் தெரிவித்ததாவது;
யாழ். மாவட்ட மக்களின் அவசர தேவை கருதி, எமது நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமையகத்திலிருந்து சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன. இவை மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையக் கூடியவாறு அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.
அங்கு உரையாற்றிய யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்ததாவது;
“வடக்கின் வசந்தம்’ திட்டத்தின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. சாவகச்சேரி வைத்தியசாலையைப் பொறுத்த வரையில் பல்வேறு அவசரத் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியனவாக உள்ளன. வைத்தியர்கள், உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட வசதிகள், நடமாடும் வைத்திய பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு போன்றவை நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகளில் சிலவாகும்.
வளப்பற்றாக்குறைகள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இங்குள்ள வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் சிறந்த முறையில் சேவையாற்றி வருவது பாராட்டத்தக்க விடயமாகும் என்றார்.
உலக சுகாதார நிறுவனம் இந்நோயாளர் விடுதிக்குத் தேவையான கட்டில்கள், மெத்தைகள், அலுமாரிகள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.