விடு தலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிப் போரில் சர்வதேச போர் விதிமுறைகள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த பன்னாட்டு குழுவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறிலங்க அரசை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா.வில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பான் கீ மூன், “போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சர்வதேச சட்ட விதி முறை மீறல்களை கண்டறிந்து அதற்குக் காரணமானவர்களைப் பொறுப்பாக்க வெளிப்படையான விசாரணை நடத்துவது தொடர்பாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அதிபர் ராஜபக்சவுக்குத் தான் இன்று (நேற்று) கடிதம் எழுதப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் 22,23ஆம் தேதிகளில் இலங்கைக்குச் சென்ற பான் கீ மூன், பல பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பான் கீ மூன், “அங்கு கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை ஒப்புக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமானது” என்று கூறியிருந்தார்.
வரலாறு திரும்பக் கூடாது என்றால்…
போர் முடிந்துவிட்டது என்று சிறிலங்க அரசு அறிவித்துவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தேவையான நிவாரணம், மறுவாழ்வு, மீள் குடியமர்த்தல், அவர்களுக்கு அரசியல் ரீதியான உரிமைகளை உறுதி செய்யும் இணக்கப்பாடு ஆகியன குறித்து அளித்த உறுதிமொழிகளை சிறிலங்க அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய பான் கீ மூன், “இரு தரப்பு அறிக்கையில் ஒப்புக் கொண்டு அளித்த உறுதிமொழிகளை சிறிலங்க அரசு நிறைவேற்றுவது அவசியம்” என்று கூறினார்.
இலங்கையின் சிறுபான்மை மக்களான தமிழர்களுக்கு உரிய அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வை அளிக்கும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும் என்று கூறிய பான் கீ மூன், அதனைச் செய்யத் தவறினால் வரலாறு திரும்புவதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.
“தமிழ் சிறுபான்மை மக்களையும், மற்றவர்களையும் சிறிலங்க அரசு உடனடியாக அணுகி அவர்களிடையே இணக்கப்பாட்டை உருவாக்கும் முதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வரலாறு மீண்டும் திரும்பக் கூடாது என்று நினைத்தால் இதனைச் செய்ய வேண்டும், உடனடியாகச் செய்ய வேண்டும். மீண்டும் சொல்கிறேன் அதனை உடனடியாகச் செய்ய வேண்டு்ம்” என்று பான் கீ மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தற்பொழுது இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களி்ல் 80 விழுக்காட்டினரை அந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த சிறிலங்க அரசு உறுதியளித்துள்ளது நம்பிக்கையளிக்கிறது என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார்.
“(இடம் பெயர்ந்த தமிழர்கள்) தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலை மிகக் கடினமானதாகவுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், அவர்கள் தங்கள் பகுதிகளுக்குள் சென்று வர சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும், தங்கள் குடும்பாத்தாருடன் சேர்ந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.