இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியா தலையிடாது எனும் சிவசங்கர் மேனன் அவர்களின் கருத்தை ஜனநாயக தேசியக் கூட்டணி பெரிதும் வரவேற்கிறது என அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக அவர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை தனியான இறைமை கொண்டுள்ள ஒரு நாடு என்ற வகையில் இலங்கை மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு வெளிநாடுகளின் தலையீடின்றி தீர்வுத்திட்டமொன்றை நோக்கிச் செல்வதே சிறந்ததாகும். இந்த யதார்த்தத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
உண்மையில் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் இந்தியா தலையிட முடியும் என்பதை ஏற்றுக்கொண்டால் இந்திய முஸ்லிம்கள் மற்றும் காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் தலையிடுவதும் நியாயம் என ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையை இந்நாட்டு மக்களே தீர்த்து சகலரும் நிம்மதியாக வாழும் சூழலை இலங்கையர்கள் உருவாக்க வேண்டும் என்பதே இந்தியாவின் யதார்த்தத்தை புரிந்து கொண்ட கருத்தாக இருக்க முடியும்.