இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவை ஊழியர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வாழ்த்தும் பாடல் அடங்கிய இறுவட் டின் முதற் பிரதியை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துக் கட்டி முழுச் சுதந்திரத்தையும் அனுபவிக்கக் கூடிய தேசத்தைப் பெற்றுத் தந்த ஜனாதிபதியின் புகழ்பாடும் வகையில் தமிழ்ச் சேவை தயாரித்த பாடலும், இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் நான்காவது பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் தமிழ் மொழி பெயர்ப்பும் கொண்ட இறுவட்டின் முதற் பிரதியும், 75 பிரதிகளும் அடங்கிய தொகுதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.
அலரி மாளிகையில் இக்கையளிப்பு இடம்பெற்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் வீ. ஏ. திருஞானசுந்தரம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, தமிழ்ச் சேவை மற்றும் தென்றல் பணிப்பாளர் கே. ஜெயகிருஷ்ணா, உட்பட தமிழ்ச் சேவையின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து இவற்றை கையளித்தனர்.
இச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடர்ந்து நாட்டுக்குக் கிடைத்த வெற்றியில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குப் பெரும் பங்கு உள்ளதென குறிப்பிட்டார்.
மனித நேய நடவடிக்கைகள் மாத்திரமன்றி, வடபகுதி மக்களின் நலன்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும்முயற்சிகள் பற்றியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அலைவரிசைகள் பெரும் பங்களிப்பை நல்கியதாகக் கூறியதோடு, வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் ஊடாக எதிர்காலத்தில் வடபகுதி மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் பற்றியும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் ஊடகங்களுக்குள்ள பொறுப்புக்கள் பற்றியும் மேலும் விளக்கிக் கூறினார்.