இலங் கையில், விவசாயம், நிர்மாணப்பணிகள், உல்லாசப் பயணத்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஐக்கிய அரபு இராய்ச்சியம் உதவ முன்வந்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (சனி) கொழும்புக்கு வருகை தந்த ஐக்கிய அரபு இராய்ச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயிட் அல் நஃயான் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஐ.அ. இராய்ச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் நேற்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் முடிவில் பிற்பகல் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இரு அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்தனர். இலங்கையில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.அ. இராய்ச்சியத்தின் அமைச்சர், இந்த ஆண்டு ஒப்டோபர் மாதம் அளவில் இரு நாடுகளுக்கிடையிலும் கூட்டு ஆணைக்குழு உருவாக்கப்படவுள்ளது. அதன் பின்னரே முதலீடு செய்வது சாத்தியமாகுமெனக் கூறினார்.
ஐ.அ.இராய்ச்சியத்தின் அமைச்சர் ஷேக் அப்துல்லா, அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, ராஜித சேனாரத்ன உட்பட அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் ரோஹித போகொல்லாகம;
சுமார் இரண்டரை இலட்சம் இலங்கையர்கள் ஐ. அ. இராய்ச்சியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1976ம் ஆண்டு அவரின் தந்தையார் வந்தார். அதன்பின்னர் அமைச்சர் ஷேக் அப்துல்லா வந்துள்ளார் என அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டினார்.