ஃபிளெட்சரின் விக்கெட்டை எடுத்து மகிழும் பந்துவீச்சாளர் பார்னெல் இங்கிலாந்தில் நடந்துவரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் இடையே நடந்த ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி இருபது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி முதலில் மட்டைப்பிடித்து இருபது ஓவர்களில் 183 ரன்களைக் குவித்திருந்தது. ஹெர்ஷெல் கிப்ஸ் அதிகபட்சமாக 55 ரன்களைக் குவித்திருந்தார். துவக்க ஆட்டக்காரர்களான காலிஸ் மற்றும் அணித் தலைவர் கிரேம் ஸ்மித் ஆகியோரும் அணியின் எண்ணிக்கை உயருவதற்கு கணிசமான பங்களிப்பு செய்திருந்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துவக்க பந்துவீச்சாளர் ஜெரோம் டெய்லர் மூன்று விட்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இரண்டாவதாக மட்டை பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் சோபிக்கவில்லை.
ஆனால் முதல் விக்கெட்டுக்காக களமிறங்கியிருந்த அண்ட்ரூ சிம்மன்ஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். 50 பந்துகளில் 77 ரன்களை அவர் குவித்திருந்தார்.
தென்னாப்பிரிக்கப் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை எடுத்ததோடு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ரன் குவிப்பு வேகத்தையும் கட்டுப்படுத்தினர்.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் பார்னெல் தனக்கு வழங்கப்பட்ட நான்கு ஓவர்களில் பதிமூன்று ரன்களை மட்டுமே தந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இருபது ஓவர்களின் கடைசியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.