‘பெற்ற வெற்றியை எவரும் பறித்துக்கொள்ள இடமளிக்க கூடாது’

mahinda-rajapaksha.jpgஇந்நாட்டில் சுமார் மூன்று தசாப்தங்கள் நிலவிய குரூர தீவிரவாதத்தைக் குறுகிய காலத்தில் முழுமையாக ஒழித்துக் கட்டி பெற்றிருக்கும் பாரிய வெற்றியை எவரும் பறித்துக் கொள்ள இடமளிக்கக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் மாலை களுத்துறையில் தெரிவித்தார்.

அதேநேரம், சட்டம், ஒழுங்கைப் பேணி தேசத்தின் கெளரவத்தைப் பாதுகாக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். விசேட அதிரடிப்படையில் அடிப்படை பயிற்சியை முடித்த 60 வது குழுவினர் வெளியேறும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். விசேட அதிரடிப்படையினரின் களுத்துறை, கட்டுக்குருந்தை பயிற்சி கல்லூரியில் பயிற்சியைப் பூர்த்தி செய்த விசேட அதிரடிப்படையின் 100 உதவி பரிசோதகர்களும், 314 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இவ்வைபவத்தின் போது வெளியேறினர்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகில் மிகவும் குரூர தீவிரவாதிகள் ஆசிய நாடான இலங்கையில் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு விசேட அதிரடிப்படையினரின் அர்ப்பணிப்புக்களும், திறமைகளும் பெரும் பங்களிப்பு செய்துள்ளது. இந்நாட்டில் பெரும் கெளரவத்திற்குரிய படைப் பிரிவொன்றில் இணைந்துள்ள உங்களை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகின்றேன்.

1983ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலால் நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உயிரிழந்தனர். அன்று முதல் இற்றைவரையும் 461 விசேட அதிரடிப்படை வீரர்கள் நாட்டுக்காக உயிர் நீத்திருக்கின்றார்கள். இருநூறுக்கும் மேற்பட்டோர் ஊனமடைந்திருக்கிறார்கள். இவர்களுக்குத் தேசத்தின் கெளரவத்தை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். தீவிரவாதம் தலைதூக்கத் தொடங்கிய போதே விசேட அதிரடிப்படை ஸ்தாபிக்கப்பட்டது. சட்டம், ஒழுங்கை நடைமுறைப்படுத்தி, அமைதி, சமாதானத்தை நிலைநாட்டும் பொலிஸாரைப் படுகொலை செய்வதற்கு பயங்கரவாதிகள் ஆரம்பித்தனர். அல்பிரட் துரையப்பாவை படுகொலை செய்து அரசியல் கொலைகளையும், சப். இன்ஸ்பெக்டர் பஸ்தியான் பிள்ளையைப் படுகொலை செய்து பாதுகாப்பு படையினருக்கும் பொலிஸாருக்கும் எதிரான கொலை நடவடிக்கைகளையும் தீவிரவாதிகள் தொடங்கினர்.

நாட்டைத் துண்டாடுவதற்காகப் தீவிரவாதிகள் அன்று முதல் நடவடிக்கை எடுத்தார்கள். இவர்களுக்கு எதிராகக் கடந்த கால ஆட்சியாளர்கள் தொடராக நடவடிக்கை எடுக்கவில்லை. சில ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தைத் தொடராக மேற்கொள்ளத் தயங்கினார்கள். ஆனால் நாம் மாவிலாறு முதல் இடைவிடாது தீவிரவாதிகளுக்கு எதிராகத் தொடராகப் போராடி அவர்களைக் குறுகிய காலத்தில் ஒழித்துக் கட்டி பாரிய வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றோம். இந்த வெற்றியை எவரும் கவர்ந்துகொள்ளவோ, பறித்துக்கொள்ளவோ இடமளியாதீர்கள்.

மனிதாபிமான நடவடிக்கையின் மூலமே நாடு தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. அதனால் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்நாட்டில் மக்களுடன் மிகவும் நெருங்கி செயற்படும் திணைக்களமாக பொலிஸ் திணைக்களமே விளங்குகின்றது. அதனால், சட்டத்தையும் அமைதியையும் பேணிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவர்களிடமுள்ளது. அதுவே எமது பாரிய வெற்றியை அர்த்த பூர்வமாக்கும்.

தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. சமாதானமில்லாமல் நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது. இவற்றைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். இதன் பயனாக தீவிரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

இந்நாட்டில் எல்லைக் கிராமங்கள் என்ற பெயரை இல்லாமலாக்குவதற்கும் விசேட அதிரடிப்படையினர் பெரும்பங்களிப்பு செய்திருக்கிறார்கள். இராணுவத்தினர் வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்த போது பயங்கரவாதிகள் மொனறாகலை, யால, ஒக்கம்பிட்டி வாழ் அப்பாவிகள் மீது தாக்குதல்களை நடத்தினர். இதன் மூலம் வன்னி மனிதாபிமான நடவடிக்கையை நிறுத்தலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் இப்பிரதேசங்களில் விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளை முறியடித்தனர்.

தீவிரவாதிகளின் முக்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட கஞ்சிகுடிச்சாற்றிலும், விசேட அதிரடிப்படையினர் பயங்கரவாதிகளுக்கு நல்ல பாடம் புகட்டினர். அம்பாறை மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் 24 முகாம்களை விசேட அதிரடிப்படையினர் குறுகிய காலத்தில் நிர்மூலமாக்கினர்.

கொழும்புக்குள் தற்கொலைப் பயங்கரவாதிகள் பிரவேசிப்பதையும் முறியடித்தனர். தீவிரவாதிகளை ஒழிப்பதில் விசேட அதிரடிப் படையினரின் பங்களிப்பும் அளப்பரியதாகும். இதற்கு பல நாடுகளின் வீரர்கள் பயிற்சியைப் பூர்த்தி செய்து வெளியாகியுள்ள சர்வதேச தரத்திலான இக்கல்லூரியின் பயிற்சி பெரிதும் உதவியுள்ளது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *