உலகக் கிண்ணத்துக்கான 20 ஓவர் கிரிக்கெட் சுப்பர்-8 சுற்றில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டி ஒன்றில் நடப்புச் சாம்பியன் இந்தியாவும், இங்கிலாந்தும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் சந்தித்தன. இரு அணிகளுக்குமே இது ஒரு பலப்பரீட்சையாக அமைந்ததால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இர்பான் பதான், பிரக்யான் ஓஜாவுக்கு பதிலாக ஆர்.பி.சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நாணயற் சுழற்சியில்; வென்ற இந்திய கேப்டன் டோனி, முதலில் பந்து வீச முடிவெடுத்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்தது.
இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளயும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சஹீர்கான், ஆர்.பி.சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர. ஆதனைத் தொடர்ந்து 154 ஓட்டங்கள்; எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ஓட்டங்களை எடுத்து 3 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்தியா ஏற்கனவே சுப்பர்-8 சுற்றின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்று இருந்தது. இனி தனது கடைசி ஆட்டத்தில் நாளை தென்ஆப்பிரிக்காவை வென்றாலும் அதற்கு பலன் கிடையாது. அதே சமயம் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.