ஈரானின் ஜனாதிபதியாக மஹ்மூத் அகமதி நிஜாத் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை மக்களுக்கு பேருவகை தரக்கூடியதொரு செய்தியாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள மஹ்மூத் அகமதி நிஜாத்துக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில் உங்கள் தெரிவு இலங்கை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.
உங்களது புதிய பதவிக் காலத்தில் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நல்லுறவுகள் மேலும் பலமடையும் எனவும் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் திட்டங்களில் நெருக்கமான ஒத்துழைப்பு நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.