சவூதி அரேபியாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் கொல்லப்பட்ட ஐந்து இலங்கையர்களினதும் குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம் ரூபா வீதம் நஷ்டஈடு வழங்க உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.
கடந்த வாரம் இடம் பெற்ற பஸ் விபத்தில் 5 இலங்கையர் உட்பட 29 பேர் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்களை இலங்கைக்கு கொண்டு வர பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு இறந்தவர்கள் சார்பாக பணியகத்தினூடாக காப்புறுதி நஷ்டஈடும் சவூதி அரேபியாவில் இருந்து நஷ்டஈட்டுத் தொகையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியக உயரதிகாரி ஒருவர் கூறினார்.
இறந்த ஐவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினூடாக பதிவு செய்தே சவூதி அரேபியா சென்றுள்ளனர். இவர்களது சடலங்களை கொண்டுவருவது குறித்தும் இறுதிக் கிரியைகளை நடத்துவது குறித்தும் பணியகம் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகமும் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகமும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.