வட மாகாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டு தற்போது புத்தளம் பிரதேசத்தில் வசித்து வரும் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் பாதுகாப்புப் படையினரைப் பாராட்டிக் கௌரவித்தனர். இது தொடர்பான வைபவம் அண்மையில் புத்தளம், வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வைபவத்தின் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டதோடு முன்னாள் சமூக சேவைகள் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.எம். அபூபக்கர், மன்னார் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.
சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில், பயங்கரவாதிகளிடமிருந்து வட மாகாணத்தை முழுமையாக மீட்டெடுத்த பாதுகாப்புப் படையினரை சிங்கள மக்களைப் போலவே முஸ்லிம்களும் பாராட்டிää கௌரவித்து வருகின்றனர். வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் விரைவில் அங்கு சென்று சுதந்திரமாகக் குடியேற முடியும் எனக் கூறினார்.
இவ்வைபத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் நாடு வெற்றிகொள்ளப்பட்டதையும் படையினரையும் வாழ்த்தும் சுலோகங்களை ஏந்தியிருந்தனர் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.