பல்கலைக் கழகங்களுக்கு 2008/2009 கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான “சற்’ வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார்.
மீளத்திருத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு காத்திருக்கிறது.
பரீட்சை பெறுபேறுகளை மீள மதிப்பிடும் பணியை பரீட்சைகள் திணைக்களம் பூர்த்தி செய்யவுள்ளது. 10 நாட்களுக்குள் “சற்’ வெட்டுப்புள்ளிகள் தொடர்பாக மதிப்பீடு செய்ய முடியும் என்று பேராசிரியர் காமினி சமரநாயக்கா கூறியுள்ளார்.
இந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்காக 48 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வருடம் 20,600 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். பல்கலைக்கழகங்களின் வசதிகளுக்கு அமைய மாணவர்கள் அனுமதித் தொகையை அதிகரிக்க பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு திட்டமிடுவதாகவும் பேராசிரியர் சமரநாயக்கா கூறியுள்ளார்.
அதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானபீடம் புத்தளவில் இருந்து பெலிஹுபில் ஓயாவிலுள்ள அதன் பிரதான வளாகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புத்தளவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விசேட அலகொன்றை ஏற்படுத்தவுள்ளோம். யாழ்ப்பாண, கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சிங்கள, முஸ்லிம் மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக இந்த விசேட அலகு ஏற்படுத்தப்படவுள்ளது. கிழக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்கு தயங்கும் மாணவர்களின் பிரச்சினையை புத்தள வளாகம் தீர்த்துவைக்கும் என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.
இதேவேளை, மீள் மதிப்பீடு செய்யப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகளை சில நாட்களுக்குள் பரீட்சைத் திணைக்களம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க கூறியுள்ளார். சுமார் 65 ஆயிரம் மாணவர்கள் தமது பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய விண்ணப்பித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.