நாடு கடந்த தற்காலிக தமிழீழ அரசாங்கத்தை அமைப்பது கே.பி.யின் (குமரன் பத்மநாதன்) கற்பனையே என்றும் அதனை கற்பனை மட்டத்திலேயே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் போகொல்லாகம, கே. பத்மநாதன் என்பவர் சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் ஒருவராகும். அவரை கைது செய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு நாம் கோரியுள்ளோம். வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் இது தொடர்பாக சர்வதேச அரசாங்கங்களிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளோம்.
கே.பி. கைது செய்யப்பட்டு இலங்கையிடம் கையளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நாட்டின் சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும். நாடு கடந்த தற்காலிக அரசாங்கம் அமைப்பது என்பது அவரின் கற்பனையாகும். அந்தக் கற்பனை மட்டத்திலேயே அதனை நாம் கட்டுப்படுத்துவோம். கே.பி. விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடத்தப்பட்ட நியூஸிலாந்து கம்பனியின் கப்பல் தற்போது சோமாலிய கடற்பரப்பில் உள்ளது. இதிலுள்ள 7 இலங்கையரை விடுவிப்பது தொடர்பில் நாம் நியூஸிலாந்து கம்பனியிடமும் நைரோப்பியுடனும் தொடர்பு கொண்டுள்ளோம்.
சங்காய் ஒத்துழைப்பு அமையமானது இலங்கைக்கு பேச்சுவார்த்தைக்கான பங்காளி என்ற அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையிட்டு இதன் போது பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையிலுள்ள சகல இனக் குழுக்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்படுமென நம்பிக்கை வெளியிடப்பட்டிருப்பதுடன் அதன் மூலம் நாட்டில் இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று தெரிவித்திருக்கின்றது.
இந்த பேச்சுவார்த்தைக்கான பங்களிப்பானது மகிந்த ராஜபக்ஷவின் அரசுக்குக் கிடைத்த மற்றுமொரு வெற்றியாகும். இதில் பாகிஸ்தான், இந்தியா பார்வையாளராகவுள்ளன. இந்த அமைப்பில் சீனா, கிர்கிஸ்தான், கசகஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் உள்ளன. இதன் நோக்கம் பொருளாதாரம் மற்றும் அரசியல் உட்பட ஏனைய விடயங்களில் இணைந்து செயற்படுவதாகும் என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.