ஏ 9 ஊடாக தனியார் லொறிகள் நேற்று யாழ்ப்பாணம் பயணம்

a-9-loorys.jpgயாழ். குடா நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு 35 தனியார் லொறிகள் நேற்று ஏ-9 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தன. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் தென்பகுதியிலிருந்து வடக்கு நோக்கி தனியார் லொறிகள் செல்ல அனுமதிக்கப்பட்டமை இதுவே முதற் தடவையாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

மூன்று தினங்களுக்கு ஒரு முறை இந்த லொறிகள் பொருட்களை ஏற்றிச் சொல்லவும் கொண்டுவரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் இந்த லொறிகள் வடபகுதியிலுள்ள பொருட்களை ஏற்றிக் கொண்டு தென்பகுதியை நோக்கி திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு தடவைக்கு 40 லொறிகள் மாத்திரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரிகேடியர் நேற்றைய தினம் 35 லொறிகளே சென்றதென்றும் குறிப்பிட்டார்.

தென்பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்லும் சகல தனியார் லொறி களும் ஓமந்தை சோதனைச் சாவடியை சென்றடைந்த பின்னர் அங்கு பாரிய சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் வடக்கை நோக்கி செல்ல அனுமதிக்கப்படும். இதற்கமைய, ஓமந்தையிலிருந்து இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றைய தினம் சகல லொறிகளும் புறப்பட்டுச் சென்றன.

உணவு, மரக்கறி, பழ வகைகள் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களே நேற்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்டன.  அதேபோன்று இந்த லொறிகள் கொழும்புக்கு திரும்பும் போது வடபகுதியில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி, பழவகைகள் உட்பட பல்வேறு பொருட்களை அனுப்பி வைக்க யாழ். குடா மக்கள் தயார் நிலையில் உள்ளதாக பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

ஏ-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தென்பகுதிக்கு தேவையான பொருட்களை ஏற்றிவரும் லொறிகள் ஓமந்தை சோதனைச் சாவடியில் சோதனையிடப்பட்ட பின்னர் தென்பகுதியை நோக்கி அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏ-9 பிரதான வீதியையும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றிய சில காலங்களுக்கு பின்னர் பாதுகாப்பு படைவீரர்களின் விநியோகத்திற்காக ஏ-9 பிரதான வீதி உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டிருந்தது.

அதேசமயம், இராணுவத்தின் பூரண வழித்துணையுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் வேண்டு கோளுக்கிணங்க யாழ். குடா நாட்டு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் தரைவழியாக கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், தனியார் லொறிகளும் பொருட்களை கொண்டு செல்வதன் மூலம் அந்த மக்களுக்குத் தேவையான பொருட்களை மேலும் இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை வடக்கு வசந்தத்திற்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *