இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவின் பிரதான அங்கத்தவர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தாலிபான் அமைப்பொன்றின் உறுப்பினரான இந்த நபர் நேற்று லாகூர் நகரில் முகம் மறைக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொண்ட இந்த நபர், இத்தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை வீரர்களைக் கடத்திச் செல்வதே தமது இலக்காக இருந்தது என்றும் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது குழுவினர் லாகூர் நகருக்கு வந்து அங்குள்ள சிறு வீடொன்றினுள் இருந்தே தாக்குதல் திட்டங்களை வகுத்ததாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இலங்கை அணி கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேர் கொல்லப்பட்டதோடு இலங்கை வீரர்கள் 6 பேரும் ஒரு பயிற்றுவிப்பாளரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.