இலங் கையில் முதலாவது பன்றிக்காய்ச்சல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்து வகைகள் தயாராக உள்ளதெனவும் இது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லையெனவும் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு வைத்திய அதிகாரி ரிசின பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதாரக் கல்விப் பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே டாக்டர் ரிசின பிரேமரத்ன இவ்வாறு தெரிவித்தார். பன்றிக்காய்ச்சல் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
பன்றிக்காய்ச்சல் குறித்து நாம் ஏற்கனவே முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன், சிகிச்சை அளிப்பதற்குரிய மருந்துவகைகளும் தருவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த 8 வயதுச் சிறுவனுக்கு பன்றிக்காய்ச்சல் வைரஸ் உள்ளமை அடையாளங் காணப்பட்டுள்ளது.
இச்சிறுவனுக்கு வைத்தியசாலையின் பிரத்தியேக அறை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. பன்றிக்காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு சாதாரண காய்ச்சலின் போது ஏற்படும் அறிகுறிகளான தடிமன், இருமல், உடல்வலி, வாந்தி என்பவற்றுடன் டயறியாவும் காணப்படலாம். பன்றிக்காய்ச்சலுக்குரிய மருந்துவகைகள் தயாராக உள்ளபோதும் இதற்குரிய ஊசி மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பன்றிக்காய்ச்சல் தொற்றிலிருந்து எம்மைநாமே பாதுகாத்துக்கொள்ள சுகாதாரத்தை அதிகூடியளவில் கடைப்பிடிக்க வேண்டும். உணவருந்த முன்னர் கைகளை சவர்க்காரத்தால் கழுவும் அதேநேரம், அடிக்கடி கைகளால் முகத்தை தொட்டுக் கொள்வதையும் தவிர்த்துக் கொள்ளவேண்டும். அத்துடன், சன நெருசல் மிகுந்த இடங்களிற்குச் செல்வதை தவிர்ப்பதுடன், கட்டாயமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படின் வாய் மூக்குப்பகுதியை துணிகளால் மூடிக்கட்ட வேண்டும்.
அத்துடன் சுத்தமான கைக்குட்டைகளையே பயன்படுத்த வேண்டும். இதேவேளை, அதிக போஷாக்குள்ள சுத்தமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். காய்ச்சலை அடையாளங்காண்பதற்குரிய சாதனமே விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது
இச்சாதனத்தின் மூலம் காய்ச்சலுகுக்கு உள்ளானவர்களை மாத்திரம்தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால், பன்றிக்காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவரை கண்டுபிடிக்க முடியாது. பன்றிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவரிலிருந்து 5 அல்லது 7 நாட்கள் கடந்த நிலையிலேயே சரியான தாக்கத்துக்கு உள்ளானதை கண்டுபிடிக்க முடியும்.
பனடோல் உட்கொண்ட ஒருவர் இச்சோதனைச் சாதனங்களூடு சென்றால் கண்டுபிடிக்க இயலாதெனத் தெரிவித்தார்.