ஈரான் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நேற்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்குத் தயாராகினர். தேர்தலில் தோல்வியடைந்த ஹுஸைன் மூஸாவி ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பை விடுத்தார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைக் கண்டித்து அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. இதில் 07 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பலியானோருக்கு துக்கம் தெரிவிக்கும் வகையில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அனைவரையும் கறுப்பு நிற ஆடைகளை அணியுமாறு ஹுஸைன் மூஸாவி கேட்டுள்ளார். அரச தொலைக் காட்சியொன்று ஆர்ப்பாட்டத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த சனக் கூட்டத்தைக் காட்டியது. ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் ஆர்ப்பாட்டக் காரர்களின் செய்திகளைத் திரட்டவோ அல்லது அவ்விடங்களுக்குச் செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.
ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைகேடாக நடந்தது. வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டுமென மூஸாவியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். பல நாட்களாக இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன. அரசாங்கத்தின் உத்தரவை மீறியும் வன்முறைகளும், ஆர்ப்பாட்டங்களும் இடம் பெறுகின்றன.
ஜனாதிபதி அஹ்மெதி நெஜாதுக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் வாக்குகளை மீள்எண்ணும்படி ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் ஜன திபதியாக முடியாது. அஹ்மெதி நெஜாத், இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகியுள்ளார். இவரின் வெற்றியை ஹுஸைன் மூஸாவியால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அமெரிக்கா, மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் மூஸாவி ஈரானின் அமைதியைக் குழப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா இதை நிராகரித்துள்ளது. ஈரானின் உள் விவகாரங்களில் தலையிடும் தேவையோ, நோக்கமோ எமக்கில்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானில் நடப்பதை அவதானிக்கின்றோம். ஆனால் அதில் தலையிடவில்லையென ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். வாக்குகள் மீள எண்ணப்பட்டாலும் அஹ்மெதி நெஜாதே வெல்வார் என நம்பப்படுகின்றது.