‘ருவன்டி-20’ கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தெரிவாகியது – 7 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா தோல்வி

20-20pakisthan.jpgஉலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இங்கிலாந்தின் நட்டிங்ஹேம் நகரிலுள்ள ட்ரெட்ன்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நேற்று தென்னாபிரிக்க அணியை எதிர்த்தாடிய பாகிஸ்தான் அணி 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இத்தொடரில் ஒரு போட்டியிலும் தோல்வியுறாது சிறப்பாக ஆடிய தென்னாபிரிக்க அணி நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷஹீத் அப்ரிடியின் சிறந்த ஆட்டத்தால் தோல்வியடைந்ததோடு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பையும் இழந்தது.

நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அப்ரிடி 34 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களைப் பெற்றார். பின்னர் 150 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களை மட்டுமே பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஜெக் கலிஸ் மற்றும் டுமினி ஆகியோர் மிகவும் சிறப்பாக ஆடி முறையே 64,  44 ஓட்டங்களைப் பெற்றனர். எனினும் பந்துவீச்சிலும் திறமை காட்டிய அப்ரிடி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார். தென்னாபிரிக்க அணியின் முக்கிய இரு விக்கட்டுக்களைக் கைப்பற்றியதோடு துடுப்பாட்டத்திலும் பிரகாசித்த அப்ரிடி நேற்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.

இதேவேளை,  இத்தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நாளை மறுநாள் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடும். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *