பயங்கர வாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்டு எல்லைக் கிராமங்கள் இந்நாட்டின் வரைபடத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது போல் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு பின்தங்கிய கிராமங்கள் என்ற அடையாளமும் இல்லாமலாக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அனுராதபுரத்தில் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி தம் இருப்பிடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வடமத்திய மாகாண மக்கள் வெளியேறாததன் பயனாக பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடிந்ததாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்திய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தையும், முப்படையினரதும் பொலிஸாரினதும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்களைக் கெளரவிக்கும் வகையில் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அனுராதபுரம், சிறிமகாபோதி விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு மண்டபத்தில் (மகுல்மடுவ) இடம்பெற்ற இவ்வைபவத்தில் வடமத்திய மாகாண சங்க நாயக்கர்களினதும் சர்வ மதத் தலைவர்களினதும், வட மத்திய மாகாண மக்களினதும் கெளரவிப்புக்கள் இடம்பெற்றன.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலகிலுள்ள முக்கியத்துவம் மிக்க புனித நகரிலிருக்கும் அட்டமஸ்தான மண்டபத்தில் வைத்து அளிக்கப்படும் இக்கெளரவத்தை முழு நாட்டையும் மீட்டெடுத்த படை வீரர்களுக்கும், அவர்களுக்குத் தலைமையும், வழிகாட்டலும் வழங்கிய எமக்கும் அளிக்கப்படும் ஒன்றாகவே பார்க்கிறேன்.
இந்நாடு விடுவிக்கப்பட்டதும் இங்கு வாழுகின்ற எல்லா மக்களுமே சந்தோஷப்பட்டார்கள், மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நாட்டின் கெளரவமும், மகத்துவமும் உலகிற்கு எடுத்துக் கூறப்படும் போது ரஜரட்டவும், எடுத்துக் கூறப்படும், ஆனால் பயங்கரவாதம் வளர்ச்சி பெறத் தொடங்கியது முதல் வடமத்திய மாகாண மக்கள் பெரும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்தார்கள், தாக்கப்பட்டார்கள்.
பயங்கரவாதிகளின் வரைபடத்தில் ஹம்பாந்தோட்டைதான் இறுதி இடமாக இருந்தது. என்றாலும் அவர்கள் வடமத்திய மாகாணத்தையும் ஆக்கிரமிப்பதற்கே முயற்சி செய்தார்கள். இதனால் தான் வடமத்திய மாகாண மக்களைத் தாக்கினர். படுகொலை செய்தனர். இருப்பினும் இம்மாகாண மக்கள் தங்கள் இருப்பிடங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் விட்டு வெளியேறவில்லை. அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இதன் பயனாக பயங்கரவாதத்தைத் துரிதமாக ஒழித்துக்கட்ட முடிந்தது.
இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ சகல மக்களும், மதத்தவர்களும், அச்சம், பீதியின்றி வாழவேண்டும். அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பது எமது பொறுப்பாகும். ரஜரட்ட என்ற பெயரைக் கொண்டிருக்கும் இம்மாகாணம் தன்னிறைவு கொண்டதாக மேம்படுத்தப்படும். எல்லா பின்தங்கிய கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்படும். இதற்கான திட்டங்கள் மஹிந்த சிந்தனையில் முன்மொழியப் பட்டிருக்கின்றன.