நலன்புரிநிலைய பாடசாலைகளுக்கு 03ஆம் கட்ட வழிகாட்டி நூலும், வினாப்பத்திரங்களும் அனுப்பி வைப்பு – த. ஜெயபாலன் & புன்னியாமீன்

Class 05 Text Bookவவுனியா நலன்புரிநிலைய பாடசாலைகளில் தரம் 05இல் கல்வி பயிலும் மாணவர்களுக்காக சிந்தனைவட்டம், தேசம்நெற் இணைந்து வழங்கிவரும் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் 1057 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சார்ந்த செயற்பாடுகள் தொகுதி 03உம், விசேட மாதிரிவினாப்பத்திரங்கள் (இலக்கம் 1 – 4 வரையும்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இம்மாணவர்களுக்கு 02 வழிகாட்டிப் புத்தகங்களும், 14 மாதிரிவினாப்பத்திரங்களையும் தனித்தனியே மாணவர்களுக்கு வழங்கத்தக்க வகையில் வழங்கப்பட்டிருந்தன. இத்தொடரில் மேலும் ஒரு புத்தகத்தையும் (தொகுதி 04) 12 விசேட மாதிரிவினாப்பத்திரங்களையும் எதிர்வரும் வாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தேசம்நெற், சிந்தனைவட்டமும் இணைந்து மேற்கொண்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இடம்பெற்ற வன்னி யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து நலன்புரிநிலையங்களில் தரம் 05இல் பயிலும் மேலதிக மாணவர்களின் எண்ணிக்கை 3815ஆக உயர்ந்துள்ளது. நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 53 பாடசாலைகளில் இம்மாணவர்கள் பயில்கின்றனர். நலன்புரிநிலைய பாடசாலை இணைப்பாளரும், கல்வி அதிகாரியுமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக நலன்புரிநிலையங்களில் இணைந்த 3815 மாணவர்களுக்கும் உதவிகளை வழங்க தேசம்நெற், சிந்தனைவட்டம், மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம், ஐக்கிய இராச்சியத்தில் அகிலன் பவுண்டேசன் போன்ற நிறுவனங்களும் மேலும் சில பரோபகாரிகளும் முன்வந்துள்ளனர். இதற்கான வேலைத்திட்டம் தற்போது வகுக்கப்பட்டு வருகின்றது. புதிதாக இடம்பெயர்ந்த மாணவர்களுக்கும் தனித்தனியே 04 வழிகாட்டி நூல்களையும், 30 மாதிரிவினாப்பத்திரங்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 23ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *