வட மாகாணத்தில் தொலைபேசி வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொலைபேசி நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ, வடக்கில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதும் அங்கு தொலைபேசிக் கட்டமைப்புகளை விஸ்தரிப்பதாகத் தொலைபேசி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சி னையை நிவர்த்தி செய்வது குறித்தும் அவற்றின் அபிவிருத்தித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை ஏற்பாடு செய்ய வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென, கொக்காவில்பிரதேசத்தில் 175 அடி உயரமான பொதுத் தொடர்பாடல் மற்றும் தொலைத் தொடர்புக் கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் கோபுரத்தினை வானொலி தொலைபேசித் தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த கரியப்பெரும தெரிவித்துள்ளார்