தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளுக்குச் சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபடலாமென்று பாதுகாப்பு அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா எம்.பி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜன் பொன்னம்பலம் ஆகியோர் கடந்த 19ம் திகதி யாழ்ப்பாணம் சென்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில் போட்டியிடத் தீர்மானித்த நிலையில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,
இரண்டு தினங்களுக்கு முன்னர் வவுனியா செல்லத் தீர்மானித்திருந்தனர். எனினும், பாதுகாப்பு அனுமதி கிடைக்கப் பெற்றிராததால், அவர்கள் அநுராதபுரத்திலேயே இருந்து வவுனியா தேர்தல் அலுவல்களைக் கவனித்துவிட்டு கொழும்பு திரும்பியிருந்தனர்.
இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, பாதுகாப்புச் செயலாளருக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இதுபற்றிக் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பணிகளில் ஈடுபட முடியும் எனப் பாதுகாப்புச் செயலாளர் கடந்த 18ம் திகதி மாலை அறிவித்திருக்கின்றார்.
பாதுகாப்புச் செயலாளரின் அறிவிப்பு கிடைத்தவுடன் யாழ் மாநகர சபைத் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வதற்காக, மாவை சேனாதிராசா எம்.பியும், கஜன் பொன்னம்பலம் எம்.பியும் யாழ்ப்பாணம் விரைந்துள்ளனர். வவுனியா நகர சபைக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு விட்டதாக கூட்டமைப்பு உறுப்பினர் துரை ரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிbழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (சுரேஷ் அணி) ஆகிய கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் ‘வீட்டு’ச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்குகின்றன.