கச்சதீவில் கண்காணிப்புக் கோபுரத்தையோ அல்லது இராணுவ பிரசன்னத்தையோ இலங்கை அரசாங்கம் கொண்டிருக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளை அரசாங்கம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது. கச்சதீவில் கண்காணிப்புக் கோபுரத்தை நிர்மாணிக்கவும் இராணுவத் தளம் அமைக்கவும் இலங்கை அரசாங்கம் திட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
“இவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட பின் இலங்கைக் கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இவை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்து வரும் நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மேற்கொள்ளப்படும் தரக்குறைவான குற்றச் சாட்டுகள், என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராமநாதபுரத்தில் இந்தியக் கடற்படையின் கரையோரக் காவல்படையும் மறுத்துள்ளதாக “இந்து’ பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.
1974 இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவில் கலங்கரை விளக்கம் போன்றதொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்ட சபையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உண்மையைக் கண்டறிவதற்கு கரையோரக் காவல் படைக் கப்பல் ஒன்று பாக்கு நீரிணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. சர்வதேச கடல் பரப்பிற்கு அருகே இந்திய கடல் பக்கத்தில் இந்தப் படகு நங்கூரமிட்டிருந்தது. அங்கிருந்தவாறு கச்சதீவின் ஏதாவது கோபுரம் கட்டப்படுகின்றதா என்பதை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். சர்வதேச கடற்பரப்பிலிருந்து 2 கடல்மைல் தூரத்தில் உள்ள கச்சதீவை அவர்கள் பார்வையிட்டனர். பைனாகுலர் மூலமும் அவர்கள் கச்சதீவை பார்வையிட்டனர். ஆயினும் அவர்களால் அங்கு கோபுரம் எதனையும் பார்க்க முடியவில்லை. அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர அங்கு வேறெந்தக் கட்டிடமும் இல்லையென கரையோர காவல்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் “இந்து’வுக்குக் கூறியுள்ளார். கச்சதீவிலுள்ள அந்தோனியார் ஆலயம் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.