வருண்காந்தியின் சி.டி. பேச்சு உண்மையானது: தடயவியல் சோதனையில் முடிவு

21varun.jpgநாடாளு மன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வருண்காந்தி பேசிய விடயங்களை உள்ளடக்கிய சி.டி. ஆதாரம் போலியானதல்ல என தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பிலிபிட் மக்களவைத் தொகுதி பா.ஜ. வேட்பாளராக வருண்காந்தி போட்டியிட்டார். பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய போது அவர், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக குற்றசாற்று எழுந்தது.

இதனை வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்தார். இதன் பின்னர் அவரது பேச்சுகள் அடங்கிய சி.டி. வெளியானது. எனினும், அந்த சி.டி. போலியானது; ஜோடிக்கப்பட்டது என வருண் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சி.டி. ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வருண்காந்தி பேச்சுகள் அடங்கிய சி.டி. உண்மையானதுதான்; ஜோடிக்கப்பட்டது அல்ல என தெரிய வந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் இத்தகவலை பிலிபிட் மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பித்து உள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து வெளியிட்டதைக் கண்டித்து பிலிபித் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கைதான வருண் காந்தி, பிணையில் விடுதலை செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *