சர்வதேச பொருளாதாரப் பின்னடைவால் பட்டினியால் வாடுவோரின் தொகை 100 கோடியை எட்டிவிட்டதாகவும் இது சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் ஐ.நா. வின் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகிலுள்ள மக்களில் 6 பேருக்கு ஒருவர் என்ற விதத்தில் யுத்தம், வரட்சி, அரசியல் ஸ்திரமின்மை, உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு,வறுமை, பட்டினி என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பட்டினியால் வாடும் மக்கள் தொகை 10 கோடியால் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு எப்.ஏ.ஒ. தெரிவித்துள்ளது.
உலகின் எந்தவொரு பகுதியும் இதிலிருந்து தடுக்கப்படவில்லையெனவும் அனைத்துப் பிரதேசங்களும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக உணவு ஸ்தாபனப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்நெருக்கடி மனிதாபிமானம் சார்ந்தவொன்று மட்டுமன்றி அரசியல் விடயமாகவுமுள்ளது. பட்டினி மற்றும் உளவியல் தொடர்பான அழுத்தங்கள் தொடர்பாக ரோமிலுள்ள இந்நிறுவனம் வெளியிட்ட அளவீட்டில் கடந்த வருடத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருட்களின் விலையேற்றம் என்பனவும் உள்ளடக்கப்பட்டன.
இது தொடர்பாக ஐ.நா.வின் முகவர் நிலையமொன்றான உலக உணவுத் திட்டத்தின் அதிகாரியொருவர் தெரிவிக்கையில்;
பட்டினியான உலகம் மிகவும் ஆபத்தானது. மக்களுக்கு உணவு இல்லாது போகும் போது அவர்களுக்கு 3 வழிகளே உள்ளன. அவர்கள் கலகம் செய்யலாம், நாட்டை விட்டு வெளியேறலாம் அல்லது மடிந்து போகலாம். இம் மூன்றுமே ஏற்றுக்கொள்ளக் கூடிய தெரிவுகளல்ல என்றார்.
உணவு விவசாய அமைய அறிக்கையின் பிரகாரம் கடந்த 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது உணவு விலை 24 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் தொடர்ந்து சந்தைகளில் கட்டுக்கடங்காது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போசாக்கின்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமை குழந்தைகளை பலி வாங்கலாம் என கிழக்கு ஆபிரிக்க சர்வதேச சுதந்திர செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அண்மையில் தெற்கு எதியோப்பியாவிற்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்த அவர், கென்ய எல்லைப்பகுதியில் மோசமான உணவுத் தட்டுப்பாடு காணப்படுவதாகத் தெரிவித்தார். அங்கு மலேரியா காய்ச்சலில் குழந்தையை இழந்த குடும்பமொன்றினைச் சந்தித்ததாகவும் போதிய போசாக்கின்மையாலேயே குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியாது போனதாயும் மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 91 கோடி 50 இலட்சம் பில்லியனாக இருந்த பட்டினியால் வாடுவோர் தொகை 11 வீதத்தால் அதிகரித்து 100 கோடி 2 இலட்சத்தை அடைந்துள்ளதாக ஒவ்.ஏ.ஓ. தெரிவித்துள்ளது. இக்கணிப்பீடு அமெரிக்க விவசாய திணைக்களத்தின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டது.
மேலும் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தை விட பட்டினியால் வாடுவோர் தொகை அதிகரித்துச் செல்வதாக எவ்.ஏ.ஓ. தெரிவிக்கின்றது. இது தொடர்பான தரவுகளை வழங்காவிடினும் இரு வருடங்கள் முன்பிருந்தே இப்போக்கு ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் அதிக சனத்தொகையைக் கொண்ட ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் 64 கோடி 20 இலட்சம் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் இத்தொகை கடந்த வருடத்தை விட 10.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆபிரிக்காவில் 26 கோடி 50 இலட்சம் மில்லியனாக இத்தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 11.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.