Tuesday, January 25, 2022

ஜூன்:26, உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் (World Anti – Drugs Day) – புன்னியாமீன்

world-anti-drugs-day.jpgஉலக ளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை,  போதைப்பொருள் கடத்தல்,  போதைப்பொருள் விற்பனை செய்தல் என்பன ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருளைக் கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப் பொருள் கடத்தலுக்காக சில அரசுகள் மரண தண்டனையைக் கூட சட்டமாகப் பிரயோகித்து வருகின்றது. எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதிலும்கூட,  போதைப்பொருளை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை. போதைப்பொருட் பாவனையால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட தினமாகவே ( ஜூன் – 26) உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் (World Anti – Drugs Day) காணப்படுகின்றது. 

போதைப் பொருட்களை பாவிப்பதனால் பாவிப்பவர்கள் பல்வேறு கஸ்டங்களுக்குட்படுவதோடு பிறருக்கும் தீங்குகளை விளைவிப்பவர்களாகவும் மாறுகின்றனர். இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக சட்டவிரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. சில நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளின் போது ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் போதைப் பொருட்கடத்தல் மேற்கொள்ளப்படுகின்றன. மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இத்தகைய கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவதனாலும்,  இதற்கு உடந்தையாக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிலர் இருப்பதினாலும் இதனை இல்லாதொழிப்பது ஒரு கடினமான செயற்பாடாகவே மாறிவருகின்றது. போதைப் பொருட்பாவனையால் ஏற்படும் தீங்குகளும், பாதிப்புகளும்,  அழிவுகளும் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜுன் 26ம் திகதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக நோக்குமிடத்து போதைப் பொருட்பாவனை பண்டையகாலம் தொட்டே இருந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது. அபின்,  கஞ்சா,  கள்ளு,  சாராயம், கசிப்பு, பீடி,  சிகரட்,  சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வந்ததை நாம் தெரிந்து வைத்துள்ளோம். சில சந்தர்ப்பங்களில் போதைப் பொருட்கள் ஒளடதமாகவும் பாவிக்கப்பட்டது. பொதுவாக களியாட்ட காலங்களில் மக்கள் போதை தரும் பானவகைகளையும்,  புகையிலை வஸ்துக்களையும் பாவித்தனர்.

world-anti-drugs-day.jpgஆனால், விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அவை நவீன உருவிலும், இலகுவான தன்மையிலும் தயாரிக்கப்பட்டன. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக்கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும்,  இவை இலகுவாகக் கடத்தவும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ப்பாக அமைந்தன. மேலைநாடுகளில தயாரிக்கப்பட்ட ஹெரோயின்,  கொகேய்ன்,  மர்ஜுவானா,  ஹஸீஸ் போன்ற நவீன போதைப்பொருட்களும் மற்றும் குளிசை வடிவத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எஸ்.டி. தூக்க மாத்திரை போன்ற வஸ்துக்களும் அதிமிகு போதையைத் தரும் மதுபானங்களும், சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. சில நாடுகளின் பொருளாதாரம் போதைப்பொருள் வியாபாரத்திலேயே தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஊசி மூலம் போதைப்பொருளை உடலிற் செலுத்திக் கொள்ளும் பழக்கம்,  தீவிர பாவனையாளரிடையே உள்ளது. இதனால் இப்படிப்பட்டவர்களிடத்தில் எய்ட்ஸ் வைரசும் தொற்றிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.

இவைகள் பற்றி விளக்கம் வழங்கத்தக்க வகையில் 1988இல் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப் பொருளுக்கெதிரான உலக மகாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

world-anti-drugs-day.jpgஇலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை,  உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகள் நவீன போதைப் பொருட்கள் நாட்டினுள் பிரவேசிக்க வழிவகுத்தன. இலங்கையில் போதை பொருட்கள் 1980களில் பரவ ஆரம்பித்தது. இலங்கையில் ஹெரோயின் விற்பனையாளர் முதன் முதலில் 1981 மே 26 இல் 70கிராம் ஹெரோயினுடன் பேருவளையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 2015ஆம் ஆண்டை போதைப்பொருள்கள் அற்ற ஆண்டாக மாற்றியமைக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை சுங்கத் திணைக்களம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை,  குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உட்பட பல அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள் மற்றும் பத்திரிகை நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மேற்படி வேலைத் திட்டம் தொடர்பாக அண்மையில் விளக்கமளிக்கப்பட்டது.

போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு போதைக்கு முற்றுப்புள்ளி திட்டம் மட்டுமே போதுமானதல்ல,  சகலரும் பூரண ஒத்துழைப்பின் மூலமே போதைப் பொருள் ஒழிப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் .போதைக்கு அடிமையானோரை அதிலிருந்து மீட்டெடுப்பது,  புதிதாக அப்பாவனைக்கு அடிமைப்படாமல் இளம் சந்ததியினரைப் பாதுகாப்பது என்ற இலக்கிலேயே அரசாங்கம் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதே நேரம்  இன்று இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பொறுத்தவரை இந்நடவடிக்கைக்கு அவை போதியதாக இல்லை. உதாரணமாக ஒரு ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் 10 ஏக்கர் கஞ்சாவைப் பயிரிட்டாலும் அதற்கான தண்டனை ஒரே விதமாகவே தற்போதுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படும் ஹெரோயின் ஒரு கிலோ மூன்று மில்லியன் ரூபா பெறுமதியானது. ஹெரோயினைப் பொறுத்தவரை 2 கிராமை சுமார் 500 பேர் பாவித்து போதை ஏற்றிக்கொள்ள முடியும். வெளிநாடுகளில் வருடாந்தம் இலட்சக் கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டு தண்டனைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

2009 மே மாதத்தில் மாத்திரம் இலங்கையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 555 சுற்றி வளைப்புகள் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது 1, 202 கிலோ கஞ்சாவை குற்றத் தடுப்புப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

world-anti-drugs-day.jpg1984இல் தாபிக்கப்பட்ட போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான தேசிய அதிகார சபை போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது. நாட்டைக் குட்டிச் சுவராக்கி,  குடும்ப வாழ்வைச் சீரழித்து நாட்டுக்குழைக்கக்கூடிய நல்லவர்களை நடைப்பிணமாக்கியுள்ள போதைப்பொருட்பாவனையை வேரோடு களைய வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வுமே இப்பாவனையை இல்லாதொழிக்கும்.  

போதைப் பொருளுக்குப் பதிலாக போதைக் குறைந்த சில பொருட்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளும் சிலநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கை பலத்த விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ளன. போதைப்பொருள் பயன்பாட்டை போதைப்பொருளை வைத்தே தடுக்க முயற்சிப்பது இயலாதது என்று திருப்பீடம் சர்வதேச சமுதாயத்தை எச்சரித்துள்ளது.

வியன்னாவில் கடந்த (2009) மார்ச் மாதம் நிறைவு பெற்ற போதைப் பொருள் தடுப்புக்கான ஐ.நா.அவையில் உரையாற்றிய மேய்ப்புப்பணி உதவிகளுக்கான திருப்பீட அவையின் செயலர் ஆயர் ஹோசே லூயிஸ் ரெத்ராதோ மர்க்கித்தே,  இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் உலகளாவிய கத்தோலிக்க நலப்பணி நிறுவனங்களின் அனுபவங்களின் அடிப்படையில் பேசும் போது இதனைத் தெரிவித்தார் . வீரியம் குறைந்த போதைப்பொருள்களை விநியோகிப்பதை அடிப்படையாகக் கொண்டு மிகவும் வீரியமான போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்குப் பல நாடுகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆயர் மர்க்கித்தே தெரிவித்தார் .

போதைப்பொருட் பாவனையானது பொதுவாக சிறுவர் பராயத்தில் ஏற்பட்டுவிடுவதாக சில அறிக்கைகள் கூறுகின்றன. பொதுவாக பாடசாலைப் பருவத்தில் தீய நண்பர்களின் சகவாசம் காரணமாக இது ஏற்படுவதாகக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் புகைப்பிடித்தலுடன் ஆரம்பமாகும் இப்பழக்கம் படிப்படியாக போதைப் பொருட் பாவனை வரை வளர்வதாக கூறப்படுகின்றது.

world-anti-drugs-day.jpgபெற்றோர்களுக்கு பொதுவாக தங்கள் பிள்ளைகள் மது அருந்துதல், புகை பிடித்தல் அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிடப் போகிறார்களோ என்ற ஐயம் இக்காலத்தில் தோன்றுவதற்கு இதுவே மூலகாரணமாகின்றது. இப்பழக்கத்துக்கு மேலைத்தியம், கீழைத்தேயம் என்று வித்தியாசமிருப்பதில்லை. 2005 இல் அமெரிக்காவில் போதைப்பொருட்கள் உபயோகிப்பதைப் பற்றிக் கண்காணிக்கும் கல்விக்கழகம் (National institute of drug abuse monitoring future), மாணவர்களிடையே நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் மூலம் 1990 இல் மிகவும் அதிகமான மாணவர்கள் போதைப்பழக்கத்தில் இருந்ததாகவும் அரசாங்கமும் பாடசாலைகளும்,  சமூகநல அமைப்புகளும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையினால் புகைபிடிக்கும் பழக்கம்,  மற்றும் மது அருந்தும் பழக்கமும் கணிசமான அளவில் குறைந்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவொரு நேர்மறை விளைவைக் காட்டிநின்றாலும்கூட, போதைப்பொருட் பாவனை இன்று புதிய வடிவத்தில் மாணவர்கள் மத்தியில் பரவிவருவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது,  சில மருந்துவகைகளை மாணவர்கள் போதைக்காகப் பயன்படுத்தி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களால் பரிந்திரை செய்யப்படும் ஆக்சிகோடின் (OxyContin), விகோடின் (Vicodin) போன்ற மருந்துகளின் உபயோகம் கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. 2005 வருட முடிவில் விகோடின் என்ற மருந்தை உபயோகிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 12.5% சதவிகிதம் அதிகரித்திருந்ததாகவும் சில வகை தூக்கமருந்துகளின் உபயோகம் 25 % மாணவர்களிடையே அதிகரித்திருந்ததாகவும் ஆஸ்த்மாவிற்காகப் பரிந்துரைக்கப்படும் அட்வேர் போன்ற மருந்து பாவனை (இவை மூச்சிழுக்கப்படும்) அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்து.

 போதைப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதைவிட மருந்துவகைகளைப் பெற்றுக் கொள்வது எளிதானதே. தங்கள் பிள்ளைகள் மருந்துவகைகள் அதிகமாகப் பயன்படுத்துகின்றார்களா என்பதையும் பெற்றோர்கள் அவதானிக்க வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர். போதைப் பொருட்களுக்குப் பதிலாக மருந்துப்பாவனை மேற்கத்திய நாடுகளில் அதிகரித்துக் காணப்பட்டபோதிலும்கூட, கீழைத்தேய நாடுகளிலும் இப்பாவனை உருவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

world-anti-drugs-day.jpgசில அறிக்கைகளின்படி தமது பிள்ளைகளிடத்தில் தன்னம்பிக்கை குறைதல், படிப்பு மற்றும் விளையாட்டுக்களில் ஆர்வம் குறைதல்,  சோம்பல் மற்றும் சற்றே ஆர்வம் குறைந்த தோற்றம்,  பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் அதிக வாக்குவாதங்கள் செய்வது போன்றவை தன்மைகள் காணப்படின் கூடிய விழிப்புணர்வுடன் பெற்றோர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளேயாயினும் அளவுக்கு மீறி எடுத்துக்கொள்வது ஆபத்தில் முடியும் என்பதை பிள்ளைகளுக்கு விளக்க வேண்டும்.   உங்கள் குழந்தைகள் மருந்துப் பொருட்களை அதிகமாகப் பயன் படுத்துவது தெரிந்தால் உடனே மருத்துவமனை,  போதைப்பொருட்கள் அடிமைத்தனத்தைப் போக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளிப்பதற்கு மறக்காதீர்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *