வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்திலிருந்து 46 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள் சக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று புலிச் சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல்களின் போதே பொலிஸார் இந்த பெருந்தொகையான வெடிமருந்துகளையும் வெடிபொருட்களையும் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்தே இந்த பாரிய தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அதிசக்திவாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள் 46 கிலோ, 10 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கி-01, 3 கிலோ எடையுள்ள தற்கொலை அங்கிகள்-03, 14 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டு-02, அதனை வெடிக்க வைக்க பயன்படுத்தப்படும் கருவிகள், வெள்ளை மற்றும் சிவப்பு நிற வயர்கள், காஸ் சிலின்டர்-01, 2.7 கிலோ எடையுள்ள குண்டுகள்-02, பிளாஸ்டிக் பரல்கள் மற்றும் பெருந்தொகையான வெடிக்கவைக்கும் கருவிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், வவுனியா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.