ஜனாதிபதித் தேர்தல் நடத்தாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் நீடிக்க வைக்கும் திட்டமெதுவும் அரசாங்கத்திற்கோ ஜனாதிபதிக்கோ கிடையாது என அமைச்சர் டளஸ் அலஹபெரும கூறினார். இது தொடர்பாக ஐ. தே. க. தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (23) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
தேர்தல் நடத்தாது சர்வாதிகார ஆட்சி நடத்த அரசாங்கம் தயாராவதாக ஐ. தே. க. கடந்த சில தினங்களாக குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கிறது. அத்தகைய திட்டமெதுவும் அரசுக்குக் கிடையாது.
பிரதேச சபைத் தலைவர்களின் சம்மேளனக் கூட்டமொன்றில் ஐ. தே. க. நகர சபைத் தலைவர் ஒருவரே போட்டியின்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தெரிவு செய்ய வேண்டுமென பிரேரணை கொண்டு வந்துள்ளார். அது அவர்களின் ஜனநாயக உரிமையாகும் என்றார். இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. கூறியதாவது,
தோல்வி என்பது ஐ. தே. க. வுக்கு மட்டுமே உரித்தான ஒன்றாக மாறியுள்ளது. அதனால் தேர்தல்களில் தமக்கு ஏற்படும் தோல்வியை மட்டுப்படுத்தவே அந்தக் கட்சி தற்பொழுது முயன்று வருகிறது.இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையை பயன்படுத்தி அரசியல் லாபம் பெற ஐ. தே. க. முயன்று வருகிறது. நிவாரணக் கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்குமாறு கோரி புலிகளுடன் தொடர்புடைய ஐ. தே. க. எம்.பி.க்கள் சிலர் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களிடையே வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் இருந்தால் அவர்களுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. ஆனால் இடம்பெயர்ந்த மக்களை அரசியல் துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெற ஐ. தே. க. முயல் கிறது. 1987 – 1989 களில் இடம்பெற்ற வன்செயல்களின் போது பெருமளவு இளைஞர்களை ஐ. தே.க. அரசு தடுத்து வைத்திருந்தது. ஆனால் அந்த இளைஞர்களை பார்வையிட ஐ. தே. க. அனுமதி வழங்கவில்லை என்றார்.