முழுமை பெறாத அரசியலமைப்புச் சபைக்கு அரசியல் யாப்பில் ஒருபோதும் இடம் கிடையாது.அரசியலமைப்பின்படி 17வது திருத்தத்திற்கு அமைய, அரசியலமைப்புக்குப் பத்துப் பேரைத் தெரிவு செய்ய வேண்டும். இதில் ஒருவரின் பெயர் பிரச்சினை யாக உள்ளதால் சபையை ஸ்தாபிக்க முடியாது என்று அரசாங்கத்தின் பிரதம கொரடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியது. வழமையான நிகழ்வுக்குப் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் சற்று சூடுபிடித்தே காணப்பட்டது. பொலிஸ் மாஅதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரின் நியமனம் தொடர்பாக பிரேமசிறி மானகே எம். பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கையில்:- அரசியலமைப்புச் சபையை ஸ்தாபிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை விளக்கினார். இதன் போது, சபாநாயகர் தமக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொரடா ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
அப்போது, இல்லாத ஒரு சபைக்குத்தான் நான் தலைவர். இல்லாத அதிகாரத்தை நான் சிருஷ்டித்துச் செயற்படுத்தவா என்று சபாநாயகர் திருப்பிக்கேட்டார். இதன்போது, ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சூடான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.
இந்த கருத்துப் பரிமாற்றத்தின் போது பார்வையாளர்கள் வரிசையில் பாடசாலை மாணவர்கள் நிரம்பியிருந்தனர். அவர்களுக்காவது அமைதியைப் பேணுங்கள் என்று சபாநாயகர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
பின்னர், தேர்தல் ஆணையாளர் தொடர்பாகவும் மேற்கண்டவாறான ஒரு கேள்வியை பிரேமசிறி மானகே எம். பி. தொடுத்திருந்தார். அதற்கும் விளக்கமளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும்வரை ஆணையாளர் ஓய்வு பெற முடியாது என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கியிருப்பதாக சுட்டினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் நிறைவடைந்ததும், முற்பகல் 11 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, ஜே. வி. பி. உறுப்பினர் சுனில் ஹந்துந்நெத்தி சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றினார்.