இருபது ஓவர்களைக்கொண்ட ‘ருவன்டி-20’ கிரிக்கெட் போட்டிகளுக்கான ‘உலக லெவன்’ அணியில் இலங்கை வீரர்களான திலகரத்ன டில்ஷான் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் நடந்து முடிந்த ‘ருவன்டி-20’ உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சிறந்த வீரர்களைத் தெரிவு செய்து ‘உலக லெவன்’ கனவு அணியை அறிவித்துள்ளது.
இரண்டாவது தடவையாக நடைபெற்ற இத்தொடரில் சம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான், 2ஆவது இடம்பெற்ற இலங்கை, அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவான தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகளின் வீரர்கள் இந்த ‘உலக லெவன்’அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ‘ருவன்டி-20’ தொடரில் சம்பியனான இந்திய அணி வீரர்கள் எவரும் இம்முறை ‘உலக லெவன்’ அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஐ.சி.சி. ~ருவன்டி-20’ உலக லெவன் அணி வீரர்கள் விபரம் வருமாறு:-
யூனிஸ்கான் (கப்டன்), கம்ரன் அக்மல், ஷஹீத் அப்ரிடி, உமர்குல் (பாகிஸ்தான்), ஜெக் கலீஸ், டிவிலியர்ஸ், வெய்ன்ர்லொஸ், (தென்னாபிரிக்கா) திலகரத்ன டில்ஷான், அஜந்த மெண்டிஸ் (இலங்கை), கிறிஸ் கெயில், பிராவோ (மே.இ.தீவுகள்).