ஜூன்:26, சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), – புன்னியாமீன்

international-day-in-support-of-torture-victims.jpg

மனித உரிமைகள் பற்றியும், ஊடக சுதந்திரம் பற்றியும் அதிகமாகக் கதைக்கப்பட்டு வரும் இந்த மிலேனிய யுகத்தில் இதுபோன்ற ஒரு தினம் பற்றி சிந்திக்க வேண்டியிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விடயமே. மனிதன் எவ்வளவு முன்னேறிவிட்டாலும் ‘மனிதனை மனிதன் வதைப்படுத்தும்” காட்டுமிராண்டித்தனத்துக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை. மாறாக நாகரிகம் வளர வளர மனிதனை வதைப்படுத்தும் உத்திகளும் நாளுக்குநாள் நவீனத்துவமடைந்து கொண்டு போவதாக கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியுமோ முடியாதோ – ஏற்றுத் தான் ஆக வேண்டியுள்ளமை மனித குலத்தின் ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.
சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது ஐக்கிய நாடுகள் பொதுசபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் திகதி இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

உலகெங்கிலும் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்பட்டோருக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலும், ஆறுதல் தெரிவுக்கும் வகையிலும், மனோரீதியான முறையில் அவர்களுக்கு விமோசனமளிக்கும் ஏற்பாடுகளை செய்யும் அடிப்படையில் இந்த நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சிறப்புத் தீர்மானத்தின் படி சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் உலகில் விடுதலை, நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் இத்தீர்மானம் வலியுறுத்தி நிற்கின்றது. இன்று உலகளாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்படி தீர்மானத்திற்கு ஆதரவு நல்கும் வகையிலும், மனிதாபிமான அடிப்படை நோக்கிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் சித்திரவதைக்கு ஆளானோருக்கு சிகிச்சை அளிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயற்படுகின்றன.

சித்திரவதை என்பது “உடலால், உளத்தால் நோவினையும் வேதனையும் திட்டமிட்டு ஒரு நபர் மீது பிரயோகிப்பது” என்று பொருள் கொள்ளப்படுகின்றது. சித்திரவதை தொடர்பாக சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையிலும் மேற்படி வாக்கியமே வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது.

சித்திரவதைபற்றி நாங்கள் சமயபுராணக் கதைகளில் இருந்தே நாம் கற்றிருக்கின்றோம். இவ்வுலகத்தில் தீமைபுரிவோர் நரகலோகத்தில் சித்திரவதை செய்யப்பட்டு வேதனைப்படுத்தப்படுவர் என்று அக் கதைகள் கூறுகின்றன. இந்துக்களின் சைவ சமய பாடக்கதைகளிற் சமயகுரவரான அப்பர் சமணர்களால் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றித்தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சமணர் அதிகாரமிழந்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை பற்றியும் அறியக்கிடைக்கிறது. இயேசுபிரான் தலையிற் முட்கிரீடம் சூட்டப்பட்டுப் பாரச்சிலுவை சுமத்தப்பட்டுப் பின் அதன்மீதே ஆணிகளால் அறையப்பட்டார் என வேதாகமம் சொல்கிறது. சித்திரவதை என்னும் எண்ணத்தின் தோற்றுவாய் சமயப்புராதண கதைகளிலும் சமய சித்தாந்தங்களிலும் ஆரம்பமாகி விடுகின்றது. உலக வரலாற்றில் இருண்ட காலத்திலும் மத்திய காலத்திலும் அடிமை முறையின் கீழும் சமய முறையின் கீழும் சித்திரவதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. எனவே சித்திரவதைகள் என்ற எண்ணக்கரு மனிதனின் ஆரம்ப காலங்களில் இருந்தே தோன்றியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.

வரலாற்று சம்பவங்களை ஆராயும்போது மத்திய காலத்திற் குறிப்பாக 15ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிற் சித்திரவதை மிக அதிகளவில் நடைமுறையில் இருந்துள்ளது. பின் அது படிப்படியாக குறைவடைந்து மீண்டும் இரண்டாம் உலக யுத்தத்தின் போது மிகப்பரவலாக இடம் பெறத்தொடங்கி இக்காலம்வரை நீடித்து வருகின்றது. முன்னைய காலங்களைவிட நவீன காலத்தில் சித்திரவதைகள் மிகவும் அதிகரித்திருப்பதை போல தென்படுவதற்கு ஊடகங்களின் வளர்ச்சியையும் வெளிப்படையாகக் கூறலாம். இரண்டாம் உலக யுத்த காலத்தில் மனிதகுலம் வெட்கப்பட வேண்டிய அநாகரிகமான வரலாறு எழுதப்பட்டது. ஜேர்மனிய நாசிகளால் யுதர்கள் மீது புரியப்பட்ட சித்திரவதைகளும் கொலைகளும் உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது.

மனிதரை மனிதர் சித்திரவதை செய்யும் எண்ணம் எவ்வாறு தோன்றியது என்று ஆராயும் போது மனிதர்களின் பரம்பரை அலகுகளை ஆராய்ந்த மருத்துவர்கள் ஒரு சில மனிதர்கள் பிறக்கும் போதே கொடூரமான இயல்புகளை வெளிப்படுத்துவதற்குரிய நிறமூர்த்தஅலகுச்சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறுகிறார்கள். ஆனால் சித்திரவதை எனும் செயல் முறை புறநடையான தனிமனித இயல்பினாற் மேற்கொள்ளப்படும் ஒரு சிறுநிகழ்வாகக் கருதப்படமுடியாது. ஏனெனில் இது திட்டமிடப்பட்ட செயல்வடிவமாகவும், தத்தமது நோக்கங்களை அடைவதற்குரிய ஒரு ஆயுதமாகவும் கையாளப்பட்டு வருவதினால் நிறமூர்த்த அலகுகளுக்கும் இங்கு ஈடுபடும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்குமென கருத முடியாது. ஜனநாயக ரீதியிலும்சரி தீவிரவாத அடிப்படையிலும்சரி உலகத்திலுள்ள எல்லாவகையான அதிகார சக்திகளும் தமது இருப்பைப் பேணவே சித்திரவதையைச் செய்கின்றன. சாதாரண குடும்ப உறவுகளில் தொடங்கி அரசாங்கம்-மக்கள் உறவு வரை இதையே அவதானிக்க முடிகிறது.

நவீன காலத்தில் சித்திரவதையின் நோக்கங்களாக செய்த குற்றத்தை அல்லது செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்தல், தேவைப்படும் தகவல் ஒன்றைப் பெறுதல் அல்லது தமக்கு சாதகமான தகவலையறிய தூண்டுதல். கைது செய்யப்பட்டவரைப் பழிவாங்குதல், தேடப்படுகின்ற ஒருவரின் குடும்பத்தினரை அல்லது நண்பர்களைத் துன்புறுத்துவதற் கூடாகத் தேடப்படுகிறவரைப் பணிய வைத்தல் அல்லது சரணடைய வைத்தல், தனது கொள்கைகளை முன்வைத்தல் எனப் பன்முகப்படுத்தப்பட்ட நோக்கங்களைக்கொண்டதாக உள்ளன. எனவே நோக்கங்களை வகைப்படுத்துவதென்பது இங்கு கடினமான ஒன்றாகும். இன்றைய கால கட்டங்களில் குற்றம் ஒன்றை நிரூபிப்பதற்கு வேறுபல வழிகள் இருக்கின்ற போதும், தேவைப்பட்ட தகவலைப் பெற வேறுவழிகள் உள்ளபோதும், அல்லது அத்தகவல்களைப் பெற்றபின்னரும் கூடச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மனிதனின் அநாகரிகத்தையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

சாட்சி ஒருவரைச் சித்திரவதைக்குள்ளாக்குவதன் மூலம் அவரது உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அழித்துவிடச் சித்திரவதை செய்பவர்கள் விரும்புகிறார்கள். சாட்சி ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை அழிக்கப்படுவது அதிகார சக்திகளுக்கு மிகவும் தேவையானதாகும். ஏனெனில் அரச அமைப்பை எதிர்த்துப் புரட்சி செய்பவர்கள், பிழையான தலைமையை எதிர்ப்பவர்கள் அவற்றுக்கெதிரான கருத்தியலையும் நடத்தைகளையும் கொண்டிருக்கிறார்கள் அவர்களது கருத்தியலும் நடத்தைகளும் இன்னும் பலரையும் தொற்றிகொள்வது தமது அதிகாரத்தைப் பேணவிரும்புகிற அரசாங்கத்திற்கோ தலைமைக்கோ ஏற்புடையதல்ல. எனவே இத்தகையவர்களின் மன உறுதியை உடைத்துவிடுவது அதிகார சக்திகளுக்கு அவசியமானதாகும்.

சர்வதேசமன்னிப்புச் சபையின் அறிக்கையொன்றின் படி உலகின் ஆறில் ஜந்து பங்கு நாடுகளில் அரச ரீதியான சித்திரவதைகள் இடம்பெற்றுவருகின்றன எனப்பட்டிருந்தது. உலகம்முழுவதும் அகதிகளாகி உள்ளவர்களில் 10 இல் இருந்து 30 சதவீதமானவர்கள் சித்திரவதைக்குள்ளானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சித்திரவதையானது உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நிகழ்த்தப்படுகின்றது. உடலியல் ரீதியான சித்திரவதைகள் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு வழிவகுக்கின்றன. சித்திரவதையானது இராணுவம் பொலிஸ் முதலாளிகளது அடியாட்கள் அல்லது போராளிகளின் ஆயுதக்குழுக்கள் சாட்சியினை கைதுசெய்வதுடன் ஆரம்பிக்கிறது.

சித்திரவதை என்பது ஒரே முறையைக் கொண்டதல்ல. இது ஒவ்வொரு அமைப்புகளுக்கேற்ப வேறுபடும். இருப்பினும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் பின்வரும் அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ளன.

தாறுமாறான தாக்குதல்: தடி, இடுப்புப்பட்டி, மண்நிரப்பிய எஸ்லோன் குழாய், போன்றவற்றினால் மிருகத்தனமாக உடலெங்கும் தாக்குதல் போன்றவை இதனுள்ளடங்கும்.

திட்டமிட்ட தாக்குதல்: தடிகளால் பாதங்களில் தாக்குதல், ஒரே நேரத்தில் இரு காதுகளிலும் அறைதல், முழங்கால் மூட்டுச்சில்லுகளில் அடித்தல், போன்றவை இதனுள் அடங்கும்.

மின்சாரச் சித்திரவதை : மின்சாரம் பாய்ச்சப்படும் போது உடலில் கடும் நோவுடன் கூடிய வலிப்பு தோற்றுவிக்கப்படுகிறது.

மூச்சுத்திணற வைத்தல்: இவ்வகையான சித்திரவதைகளின் நோக்கம் சாட்சியை மிகக்கடுமையான திணறலுக்கு உட்படுத்துவதாகும். இவ்வகைச் சித்திரவதையின் போது சாட்சி மரணமடைந்துவிடாதபடி கைதியின் நாடித் துடிப்பை சித்திரவதைசெய்பவர் கணித்தபடி இருப்பார். இந்நிலையில் மரணங்கள் ஏற்படுவதும் உண்டு.

எரிகாயங்களை உண்டாக்குதல்: எரிகின்ற சிகரட்டினால் உடலின் மென்மையான பாகங்களில் சுடுதல். தீயில் நன்கு எரிக்கப்பட்ட கம்பிகளால் சுடுதல்.

கட்டித்தொங்கவிடுதல்: இருகைகளையும் முறுக்கிக் கட்டி தொங்கவிடுதல், இருகால்களையும் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுதல், ஒருகை அல்லது ஒருகாலில் மாத்திரம் கட்டித் தொங்கவிடுதல் போன்றவை இதனுள் அடங்கும்.

உடற் பாகங்களைப் பிடுங்குதல்: தலைமயிர், நகங்கள், நாக்கு, விதைகள், பற்கள் என்பவற்றைப் பிடுங்குதல் அல்லது உடைத்தல் அல்லது நசுக்குதல்.

பாலியல் ரீதியான சித்திரவதைகள்: உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை உண்டுபண்ணுகிற ஒரு சித்திரவதையாகும்.

உளவியல் ரீதியான முறைகள்: தனிமைப்படுத்தி வெறுமையை உண்டாக்கி மன அழுத்தத்திற்கு உட்படுத்தல்:

அதீதிமான பயமுறுத்தல்கள்:

இப்போது சில நாடுகள் பயன்படுத்தும் சித்திரவதை முறைகள்
இவற்றைவிட அதிகக் கொடுமையாக இருக்கிறதாக மனித உரிமை அறிக்கைகள் கூறுகின்றன. இதற்காக வேண்டி விதம் விதமான கருவிகளும், ஐயறிவுஜீவிகளும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. இன்று சித்திரவதை என்பது தொழில் முறையாகவும் கலைநுணுக்கம் நிறைந்ததாகவும் நவீன உபகரணங்கள் பாவிக்கப்படுவதாகவும் மாறியுள்ளது. சித்திரவதை செய்வோர் சித்திரவதைக்குள்ளாகி உயிர் வாழ்பவர்களின் அனுபவங்களை அடிப்படையாக வைத்து கைதியை மரணமடையச் செய்யாமல் அதே நேரத்தில் எவ்வளவு கடுமையாகச் சித்திரவதைகளைச் செய்யலாம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். Frederic Forsythe எழுதிய ‘Fist of God’, எனும் நூலில் அவர் வித விதமான சித்திரவதை முறைகளை விலாவாரியாக விவரித்திருக்கிறார்.

இவ்வாறு சித்திரவதைகள் நிகழ்த்தப்பட்ட பின்பு சாட்சியானவர் சித்திரவதை செய்யப்படவில்லையென மருத்துவரொருவர் சான்றிதழை வழங்குவார். அல்லது சாட்சி தான் சித்திரவதை செய்யப்படவில்லை என ஒப்பதல்வாக்குமூலமொன்றில் கையொப்பமொன்றை அல்லது விரலடையாளமொன்றை இடவேண்டியிருக்கும். இந்த நடவடிக்கைகள் அரசாங்கங்கள் தமது தூய்மைத்தன்மையைப் பேணிக்கொள்ள கடைபிடிக்கும் வழிமுறையாகும்.

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), இன்று என்ற அடிப்படையில் சித்திரவதைக்கு ஆளானவர்கள் நிலை பற்றி நோக்குதல் அவசியமானதாகும். சித்திரவதையின் விளைவுகள் சடுதியாக அல்லது நீண்டகால அடிப்படையில் வெளிப்படுபவையாக இருக்கலாம். அதேபோல சிகிச்சையின்போது உடனடியாகவும் குணமடையலாம். சிலதாக்குதல்களுக்கு நீண்டகால சிகிச்சையும் தேவைப்படலாம். சிலசந்தர்ப்பங்களில் சித்திரவதையின் விளைவுகள் வாழ்நாள் உள்ளவரை தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். உதாரணமாக உடல் அங்கவீனம், இனப்பெருக்க ஆற்றல் இழப்பு போன்றவற்றை நிரந்தர விளைவுகளாகக் குறிப்பிடலாம்.

சித்திரவதைக்குட்பட்டவர் தாக்கப்பட்ட நிலையில் வெளிப்படையான காயங்கள், இரத்தக்கண்டல்காயங்கள், சிறிய பாரிய எலும்பு முறிவுகள் என்பனவும் ஏற்பட்டிருக்கலாம். பற்கள் உடைதல் பற்கள் இல்லாது போதல் முழுப் பற்களும் காலப்போக்கில் உதிர்தல் போன்றனவும் அவதானிக்கப்படுகிறது. மூட்டுக்களில் நோ, மூட்டுக்கள் வீங்குதல், நீண்ட தூரம் நடக்கமுடியாமை போன்ற தசை, வன்கூட்டுத் தொகுதிகளுடன் தொடர்புடைய விளைவுகளும் ஏற்பட இடமுண்டு.
மூச்சுத் திணறவைக்கும் சித்திரவதை முறைகளால் சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். அதேநேரம், வயிற்றழர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் உள்ளன. இது தவிர இழைய வீக்கம், தசைத் தொழிற்பாடு மந்தமடைதல் போன்ற நோய்களும் தோன்றுகின்றன. சித்திரவதைக்குள்ளான அனேகமானவர்கள் இருதயம், சுவாசப்பை, உணவுக்கால்வாய் தொகுதி, மூளை ஆகியவற்றுடன் தொடர்புடைய பாதிப்புக்களைக் கொண்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உடலியல் ரீதியான சித்திரவதையின் விளைவுகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படின் அவற்றிலிருந்து ஓரளவுக்காவது மீள முடியும். ஆயினும் சித்திரவதையினால் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு சிகிச்சைகளை மேற்கொள்வதே உடலியல் சிகிச்சையை விட முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதற்காக வேண்டி இன்று பல்வேறுபட்ட கவுன்சிலின் நடவடிக்கைகள் நிறுவன மட்டங்களிலும் தனியார் மட்டத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சித்திரவதை செய்யப்பட்டவர் தான் மாற்றப்பட்டுவிட்டதாக, தனது அடையாளம் அழிக்கப்பட்டு விட்டதாக ஏற்படும் உணர்வினை கலைவது கடினம். சித்திரவதைக்கு முன்பு உறுதியானவராகவும்

பலமுடையவராகவும் இருந்த அவர் சித்திரவதையின் பின் உறுதியை இழந்தவராக களைப்படைந்தவராக மாறிவிடுகிறார். சுயமதிப்பீடு அவருக்கு சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது. சூழ உள்ளவர்களை நம்ப அஞ்சுகிறார். மன அமைதியை இழந்து போகிறார். இது இயல்பாக ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கின்றது.

சித்திரவதைக்குள்ளாகி உயிர்வாழும் அரசியல் கைதிகளின் நிலை மிகப் பரிதாபகரமானதே. ஏனெனில் இவர்கள் தாம் எதற்காககாகத் துன்புறுத்தப்பட்டார்கள், எவ்வாறெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள் என்பவற்றைக்கூட பிறருடன் கருத்துப் பரிமாறிக் கொள்ள முடியாத நிலையில் மாற்றப்பட்டு விடுகின்றார். மறுபுறமாக அவர்கள் எந்த அரசியல் சமூக வாழ்க்கை முறைகளை புரட்சிகரமானதாக கருதினார்களோ அவற்றைப் புரிந்து கொள்ளும் திறனுள்ள மனிதர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் அற்றவர்களாக மாறிவிடுகின்றார்கள்.

பொதுவாக கடுமையான சித்திரவதைகளுக்கு உட்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான தலையிடி, ஞாபகமறதி, உறக்கமின்மை என்பன பொது நோய்களாக அமைந்துவிடுகின்றன. எனவே, சித்திரவதைக்குள்ளானோர் சமூகத்தில் அதிகமாக சிந்திக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்களுக்காக வேண்டி ஒரு தினத்தை மாத்திரம் உருவாக்கி இவர்கள் பற்றி சிந்திப்பதைவிட தினந்தோறும் பராமறிக்கக் கூடிய ஒரு குழுவினர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும். விசேடமாக மானசீகமான முறையில் இவர்களின் உளத்தாக்கங்கள் கலைய விளைய வேண்டியது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • msri
    msri

    உண்டி கூழுக்கு அழுகின்றது!
    கொண்டை பூவுக்கு அழுகின்றது!
    எம்நாட்டில் தமிழ்மக்கள்> லட்சோபலட்சம் பேர்> உடல் ரீதியாகவும்>உளரீத்யாகவும் பாதிக்கப்பட்டு> முகாம்களிலும்>முட்கம்பிவேலி> சிறைகளிலும் சித்திரவதைகளை அனுபவிக்கின்றனர்! இந்நிலையில் அரசும்> அதன் தொழுதுண்டு வாழ்வோரும் > அவசரகாலச் சட்டம்>ஊரடங்குச்சட்டங்களின் மத்தியில் தேர்தல் கொண்டாடுகின்றனர்! இதற்கு ரசிகர் கூட்டம்> வடக்கின் வசந்தம்> டக்ளசு “பிரட்சி வீரன்” என சித்தாங்கள் சொல்கின்றது!

    Reply
  • palli.
    palli.

    M சிரி;; என்ன இது வில்லதனம்:
    உங்க தலைவருக்கு இதுவரை புரியாத பட்டங்கள் இருக்கும்போது; (மே த கு; தங்கதலை; தமிழின தலை; தேசியதலை; புரட்ச்சிதலை ; மேல்பார்வை தலை பங்கர்தலை, ……தலை; இப்படி பத்துவிரல் போதாத பட்டங்கள் இருக்கும்போது; அரசுக்கு எதிராக போராட புறப்பட்டு அது தவறி; பின்பு தமிழகத்தில் ஏழைமக்களுடன் பேயாடி அதிலும் தவறி; தட்டு தடுமாறி அரசுடன் இனைந்து அதில் அமைச்சர் பதவியும் (எந்த அரசாக இருந்தாலும்) பெற்று மக்களுக்கு சேவை செய்ய உங்களது தலையின் கரும்புலிகளின் தாக்குதலுக்கும் முகம் கொடுத்து: சங்கரியின் கடிதம்; முக்கூட்டின் எதிர்ப்பு; கருணாவின் வருகை; புதிதாக ஒரு டெலோவை உருவாக்கி அதுக்கு இன்று ஒரு இடத்தையும் அதுக்கான செலவுகளையும் மகிந்தாவிடம் பெற்று கொடுத்து சிலரால் பாராட்டும் பலரால் சீராட்டும் பெற்றும் சழைக்காமல் தேச தொண்டு (அப்படிதான் சொல்லுகிறார்) ஆற்றும் அவருக்கு ஏன் புரட்ச்சி தமிழன் என்றோ அல்லது அவருக்கென ரசிகரோ இருக்ககூடாது; அதுவும் சரிதான் நீங்கள் தலைவர் கொடுக்கும் நாட்டு பற்று; வீட்டு பற்று, குளத்து பற்று; புலி பற்று; புலம் பெயர் பற்று; அம்மான் மச்சான் மாமன் இப்படி மிக விலை உயர்ந்த பட்டங்களை கண்டு கண் குளிர குளித்த உங்களுக்கு இது கசக்கதான் செய்யும்;அதுதான் 30வருடமாய் நிங்கள் குதியன் குத்தினியள் இனி அவர்கள் சில காலம் குத்தட்டும் விடுங்கோ;

    Reply
  • msri
    msri

    பல்லி
    அவர்>”மேதகு” 30வருடமாக குதியன் குத்தி> தமிழ்மக்களை முட்கம்பி வேலியிக்கை விட்டு> தானும் கோடாலிக்கொத்து வாங்கி போயிட்டார்! இனி இவைக்கும் ஒரு முப்பது வருடமென்றால்> தமிழினம் தாங்காது! எல்லாரும் நெல்லென்று நினைத்து> உமியை எல்லோ குத்துகினம்!

    Reply