இலங்கையில் இடம்பெயர்ந்து வந்துள்ள பெற்றோரை இழந்த சிறுவர்களில் ஒரு தொகுதியினர் வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் அறங்காவலர் அவையினரால் நடத்தப்பட்டு வருகி்ன்ற அருளகம் சிறுவர் இல்லத்தில் நீதிமன்றத்தின் மூலம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.
பெற்றோர் மற்றும் உற்றோர் ஆதரவற்ற 129 சிறுமியர் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இங்கு ஏற்கனவே சிறுவர் இல்லம் ஒன்றும் முதியோர் இல்லம் ஒன்றும் செயற்பட்டு வருகின்றன.
இரு தினங்களுக்கு முன்னர் ஒப்படைக்கப்பட்ட இந்தச் சிறுமியரின் உடனடி அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்கியிருக்கின்றன.
இந்தச் சிறுமியர்களின் நலன்கள், வவனியா மாவட்ட நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வன்னிப்பிரதேசத்தில் இயங்கிவந்த பல்வேறு சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களைப் படிப்படியாக அரசாங்கத்தினால் பதிவு செய்யப்பட்ட சிறுவர் இல்லங்களில் ஒப்படைத்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவி்த்திருக்கின்றனர்.