இலங்கைக்குத் தபால் மூலமாக அனுப்பப்படவிருந்த துப்பாக்கியால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
வெள்ளி காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மூலம் இந்தப் பார்சல் அனுப்பப்படவிருந்தது. அதன்போது பார்சலை ஸ்கேன் செய்தபோது அலாரம் ஒலித்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில் துப்பாக்கியொன்று இருந்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்துப்பாக்கியைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அப்பார்சலை விமான நிலையத்தில் கையளித்த தபால் துறை ஊழியர் சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினர். அதன்போது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் பார்சலை டெலிவரி கொடுப்பது மட்டும் தான் தனது பணி என்றும் கூறினார். தொடர் விசாரணையில் அது பறவைகளைச் சுடும் “ஏர் கன்’ வகையைச் சேர்ந்த ஆபத்தற்ற துப்பாக்கி எனவும் அதை வைத்துக்கொள்ள லைசன்ஸ் பெற வேண்டியதில்லை என்றும் தெரியவந்தது.
இத்துப்பாக்கியை சென்னை அண்ணாசாலையைச் சேர்ந்த விஜய் என்பவர் கொழும்பிலுள்ள தனது நண்பர் சபரீசனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை “கியூ’ பிரிவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.