தனியார் நிறுவனங்களுக்குக் கடந்த காலங்களில் குத்தகைக்கு வழங்கப்பட்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளில் சிலவற்றில் தற்போது பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவ்வாறான காணிகளை மீள அரசுடைமையாக்கி உரிய முறையில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்ட தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் மாணிக்கக்கல் வர்த்தகர்களின் ஜனாதிபதியுடனான சந்திப்பு நேற்று இரத்தினபுரி கல்படிதென்ன தேயிலைத் தொழிற்சாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, பவித்ரா வன்னியாரச்சி,மஹிந்த ரத்னதிலக்க உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்:-
தேயிலை மற்றும் மாணிக்கக் கல் வர்த்தகத்துறை எமது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கக் கூடிய இரு துறைகளாகும். இத்துறைகளின் மேம்பாட்டிற்கும் அத்துறைகளில் ஈடுபட்டுள்ளோரின் நலன்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வந்துள்ளது. எதிர்காலத்திலும் தேவையான நடவடிக்கைககள் மேற்கொள்வதில் பின்நிற்கப்போவதில்லை.
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு வெளிநாட்டுச் செலாவணி மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் நாம் மாணிக்கக் கல் வர்த்தகத்துறையினருக்கு வழங்கியுள்ள சலுகைகள்ää நிவாரணங்களை ஒப்பிடும்போது அதன் மூலம் எமக்குக் கிடைத்த வருமானம் மிகவும் குறைவானதே என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். போதைக்கு முற்றுப் புள்ளிவைப்பது போல் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊறு விளைவிப்போருக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
டொலரொன்று 123 ரூபாவாக அதிகரித்தபோதும் அதனைக் குறைப்பதற்காக எம்மால் நடவடிக்கை எடுக்க முடிந்துள்ளது. நான் ஒரு போதும் சர்வதேசத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிபவனல்ல. எனவே இலங்கையின் பொருளாதாரத்திற்கு உச்சளவு பங்களிப்பை இது போன்ற துறைகள் வழங்க வேண்டியது அவசியம்.
நாம் எதைச் செய்வதற்கும் எமக்கென்று நாடு ஒன்று தேவை. நாம் அதனை வெற்றி கரமாக மீட்டெடுத்துள்ளோம். இந்த நாட்டிலிருந்து வறுமையை ஒழித்து நாட்டை அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கட்டியெழுப்ப சகல துறையினரதும் பங்களிப்பு மிக முக்கியமாகிறது.
எதிலும் நாம் பிரிந்திருந்து செயற்படுவது வெற்றியளிக்காது. வர்த்தக சமூகம்ää உற்பத்தித்துறை என சகலரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் சகலதையும் சாதிக்க முடியும். வர்த்தக நிறுவனங்கள் உற்பத்தித்துறைகளில் சகோதரர்கள் ஒன்றிணைந்து உழைத்து முன்னேற்றம் காண்பது போல நாட்டைக் கட்டியெழுப்புவதிலும் நாம் எமது தாய்நாட்டின் பிள்ளைகளாக, சகோதரர்கள் போல் இணைந்து செயற்படுவது அவசியமாகுமஎன ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.