நுரைச் சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கை-சீன அரசாங்கங்களுக்கிடையில் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில்,
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கை-சீன அரசாங்கங்களுக்கிடையில் இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்வலு, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில்,
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும். மின்வலு, எரிசக்தி அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன உட்பட இலங்கை மின்சார சபை முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்கவுள்ள இந்நிகழ்வில் இலங்கை சார்பாக மின்சார சபையும் சீனா சார்பாக சி.எம்.சி. கம்பெனியும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட உள்ளன.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டாம், மூன்றாம் கட்டங்களின் கீழ் 600 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதற்கு சீன அரசாங்கம் 892 மில்லியன் டொலரை இலகு கடனாக இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இந்த அனல்மின் நிலையத்தின் முதலாம் கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு இதனூடாக 2010ஆம் ஆண்டிலிருந்து 300 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இரண்டாம் கட்டத்தில் 300 மெகா வோர்ட் மின்சாரமும் மூன்றாம் கட்டத்தின் கீழ் மேலும் 300 மெகா வோர்ட் மின்சாரமும் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 2ஆம், 3ஆம் கட்டப் பணிகளை 2013ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கம் வழங்கும் இலகு கடன் காரணமாக இலங்கைக்கு 491 மில்லியன் டொலர் பொருளாதார நன்மை ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.