வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன்வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.
2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.
எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.
ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 27,77,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சிந்தனை வட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.
லண்டனில் இயங்கும் அகிலன் பவுண்டேசன் இம்மாணவர்களின் கல்வித்திட்டத்திற்கு உதவ முன் வந்துள்ளது. இது பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்” க்கு வழங்கிய விசேட நேர்காணல் கீழே தரப்படுகின்றது.
தேசம்நெற்: தற்போதைய நெருக்கமான சூழ்நிலையின் பின்னணியில் வன்னி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த தரம் 05 மாணவர்களுக்கு உதவும் முகமாக மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் முன்வந்தமையிட்டு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பான நீங்கள் இத்திட்டத்தில் ஏன் உதவியளிக்க முன்வந்தீர்கள் என்பதை குறிப்பிட முடியுமா?
ஏ.எம். வைஸ்: மானுடம் என்று பார்க்கும்போது இனம், மதம் இரண்டாம் பட்சமே. வன்னி மாவட்டத்திலிருந்து பாதிக்கப்பட்டு வந்துள்ள அனைவரும் மானுடப் பிறவிகளே. எங்களைப் போலவே ஆசாபாசமுள்ள அவர்களது உணர்வுகளை நாங்கள் மதிக்க வேண்டும். கடந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் திரு. சுசில் பிரேம்ஜயந்த அவர்கள் தெரிவித்த அறிக்கை பிரகாரம சுமார் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்து வன்னியில் அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர்.
இம்மாணவர்களின் நிலையினை நேரடியாக அவதானிக்கும்போது அவர்களின் ஏக்கங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அந்த அடிப்படையிலேயே மாணவர்களின் கல்வி நலனுக்காக வேண்டி செயல்படும் அமைப்புகளுடன் இணைந்து உதவி புரிய எண்ணியமையினாலேயே தேசம்நெற், சிந்தனைவட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இதற்கு உதவி வழங்க முன்வந்தோம்.
மறுபுறமாக இனங்களுக்கிடையே ஐக்கியத்தைப் பற்றி கூட்டங்களில் பேசுவதால் மாத்திரமோ, அறிக்கைகள் விடுவதால் மாத்திரமோ சரிசெய்யப்படுவதில்லை. நாங்கள் செயல்பாட்டு ரீதியாக முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால்தான் நடைமுறை சாத்தியப்பாடுமிக்கதாக இருக்கும். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக உதவிகளை வழங்குவதில் முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் ஒரு கடமையெனக் கருதுகின்றது.
தேசம்நெற்: எம்மால் வழங்கப்படக்கூடிய மாதிரிவினாத்தாள்கள், வழிகாட்டிப் புத்தகங்கள் மாணவர்களுக்கு பயனுள்ளவையாக உள்ளது என நீங்கள் கருதுகின்றீர்களா?
ஏ.எம். வைஸ்: தேசம்நெற் ஆலும் சிந்தனைவட்டத்தாலும் வழங்கப்படும் மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் எமது முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவு பரிசீலித்தது. அந்த வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் புதிய பாடத்திட்டத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளமையை எமது கல்வி அபிவிருத்திப் பிரிவு உறுதிப்படுத்தியது. எமது கல்வி அபிவிருத்திப் பிரிவில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விமான்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். கல்வி அபிவிருத்திப் பிரிவின் உறுதிப்பாட்டின் பிற்பாடு இத்திட்டத்துக்கு உதவுவதில் எமக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை.
மேலும், தேசம்நெற் ஆலும் சிந்தனைவட்டத்தாலும் விநியோகிக்கப்படும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிநூல்களும் நேரடியாக மாணவர்களிடம் போய்ச் சேர்வதை எம்மால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. வேறு உதவிகள் நிமித்தமாக எமது இயக்கத்தின் சார்பில் இடம்பெயர் முகாம்களுக்கு சென்ற பிரிதிநிதிகள் இதனை உறுதிப்படுத்தினர். அதேநேரத்தில் இடம்பெயர்ந்த தரம் 05 மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிந்தனைவட்ட வினாத்தாள்களுக்கும், வழிகாட்டிப் புத்தகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருவதையும் அவதானிக்க முடிந்தது.
தேசம்நெற்: அரசாங்கம் இம்மாணவர்களுக்காக வேண்டி இலவச பாடப்புத்தகங்களை வழங்கி வரும் அதேநேரத்தில் எம்மால் வழங்கப்படும் வழிகாட்டிப் புத்தகங்கள், மாதிரிவினாத்தாள்களின் முக்கியத்துவத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்?
ஏ.எம். வைஸ்: அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள அனைத்து தர மாணவர்களுக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச புத்தகங்களை வழங்கி வருகின்றது. இந்த அடிப்படையில் தரம் 05 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு முக்கிய விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்படும் புத்தகங்கள் ஓராண்டு கல்வி செயற்பாட்டை மையமாகக் கொண்டு கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டவையாகும். ஆனால், இடம்பெயர்ந்து வந்துள்ள பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத் தீவைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 06 மாதங்களில் பாடசாலைக் கல்வியைப் பெறாத நிலையிலேயே உள்ளனர்.
அதேநேரத்தில் மடுவலயம், முல்லைத்தீவு துணுக்காய் போன்ற பிரதேச மாணவர்கள் கிட்டத்தட்ட ஓராண்டுகள் பாடசாலைக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய தேசிய பரீட்சைகள் தேசிய ரீதியில் திட்டமிடப்படுவதனால் அரசாங்கப் பரீட்சைகள் திட்டமிட்டபடி திட்டமிட்ட நேரஅட்டவைணயில் நடைபெறுகின்றன. இதனால் இடம்பெயர்ந்த மாணவர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்யாத நிலையில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தேசம்நெற், சிந்தனைவட்டம் இணைந்து வழங்கும் மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக அமைகின்றன என்றே நாம் கருதுகின்றோம்.
தேசம்நெற்: இடம்பெயர்ந்த மாணவர்கள் தொடர்பாக தங்கள் இயக்கம் ஏற்கனவே பல ஆய்வுகளை மேற்கொண்டதாக நாம் அறிகின்றோம். இந்த மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்து யாதாவது குறிப்பிட முடியுமா?
ஏ.எம். வைஸ்: பொதுவான அவதானத்தின் பிரகாரம் இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களும் போல மானசீகமாக பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து பிரிந்து வந்த வேதனை, தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்த துயர சூழ்நிலை. ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் கற்பதற்கும் போதிய வசிதியில்லை இவ்வாறாக பல காரணங்கள் நிமித்தமாக மனோநிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கூட, இச்செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே.
இத்தகைய மாணவர்களிடம் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் போதனைகளை நடத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு காரியமே. அதற்காக இம்மாணவர்களை விட்டுவிடமுடியாது.
மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதைவிட அரசாங்கப் பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு அப்பரீட்சையை முகம்கொடுக்கக் கூடிய வழிகளைக் காட்ட வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமானது. மாணவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய இரண்டு பிரதான பரீட்சைகளை எதிர்நோக்கியுள்ளனர். இதில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக வேண்டி பல துரித செயற்றிட்டங்கள் நடைபெறுவதாக அறிகின்றோம். அதேநேரம் தேசம்நெற், சிந்தனைவட்டம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தும் இத்திட்டம் தரம் 05 மாணவர்களுக்கான துரித செயல்திட்டமாகக் கொள்ளலாம். இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்.
chandran.raja
அன்னசத்திரம் ஆயிரம் பல
ஆலயம் பதி ஆயிரம் நாட்டல்
என்னார் எவரும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்துதறிவித்தல்.
சமூகத்தின் அடிப்படைதேவைகளில் கல்வியும் அதற்குரிய சமஇடத்தை பிடிக்கிறது. அதுவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கப் பெறும்போது அதன் முக்கியத்துவம் எவ்வளவு பெறுமதிமிக்கவை என்பதை புரிந்து கொள்ளமுடியும். இதையே “தேசபக்தி” என்பது. கடந்தகாலங்களில் சிங்களவன் தரமாட்டான் மூஸ்லீம் தொப்பி பிரட்டி என்ற பதங்களைப்பாவித்து நாட்டில் வன்முறையைத் தூண்டி இறுதியில் எம்மை நாமே அழித்துக்கொண்டது போல இல்லாமல் நாம்எல்லோரும் இன்நாட்டின் மன்னர்களே என்று ஐக்கியப்படுவோம்மானால் மிகவிரைவில் சுபீட்சமான இலங்கையை காணமுடியும். “தேசம்நெற்றும்” தன்பங்கிற்கு தம்பணிதொடர எனது வாழ்துக்கள்.
lio
ஏ எம் வைஸ் தேசம்நெற் சிந்தனை வட்டம் செய்யும் உதவிகளுக்கு நன்றிகள் சிறு சிறு பல உதவிகள் அந்த மக்களை போய்ச் சேரவேண்டும் இன்னும் பலரும் உதவுங்கள் தனியாகவும் கூட்டாகவும் தயவு செய்து உதவுங்கள்.
இன்னும் பலர் பல அமைப்புக்கள் உதாரணமாக செயற்ப்பட முன்வர வேண்டும்.
msri
தமிழ்மக்களுக்கு உணவு உடை இருப்பிடத்தைத தவிர வேறெதுவும் தேவையில்லை கூறும் அரசியல் கட்சிகளும்>தலைவர்களும் உள்ள நாட்டில் இன ஐக்கியம்எப்படி வரும்!
palli.
தேச நிர்வாகத்துக்கு பல்லி சிலவிடயங்களை செய்துகொண்டே இருக்கிறேன்; என்னும் பலர் பல்லிபோல் முகம் காட்டாமலோ அல்லது விளம்பரம் ஏதும் இன்றி சில உதவிகளை செய்ய விரும்புவதால் ;தேசம் அங்கு அதரவற்ற குழந்தைகளை பராமரிபப்பதுக்கு நண்பர்கள் நேரடியாக வன்னிக்கோ அல்லது அங்கு அவர்களை பாதுகாக்கும் அமப்புக்கோ தொடர்புகள் செய்யமுடியுமா முடியுமாயின் அந்த தொடர்புகளை தேசத்தில் தரவும்; பலருக்கு அது உபயோகமாக இருக்கும்;