ஆசிய அளவில் நடத்தப்படும் முதலாவது இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் சிங்கப்பூரில் திங்கட்கிழமை தொடங்கின.
இரு வார காலம் நடைபெறவுள்ள இந்த விளையாட்டுப் போட்டிகளில் 42 நாடுகளில் இருந்து சுமார் 1400 பேர் கலந்து கொள்கிறார்கள்.
14 முதல் 17 வயது உட்பட்டோருக்கான இந்த விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், நீச்சல், கால்பந்து, துப்பாக்கிச் சுடுதல், படகுப் போட்டி உட்பட பத்து பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகள் சிங்கப்பூரில் இளைஞர்களை விளையாட்டின்பால் கவர்திழுத்து அவர்களின் மேம்பாட்டுக்கு உதவும் என்று தாங்கள் நம்புவதாக இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவின் இணைத் தலைவரும் சிங்கப்பூர் விளையாட்டு ஆணையத்தின் தலைவரான உன் ஜின் டியக் தெரிவித்தார்.
குறைந்த அளவிலான செலவிலேயே இந்தப் போட்டிகள் நடைபெறுவதால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளும் இவற்றை நடத்த முடியும் என்பதே இதன் சிறப்பு என்றும் அவர் கூறுகிறார். ஜூலை மாதம் 7 ஆம் தேதி வரை இந்த முதலாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகள் இடம் பெறவுள்ளன.