இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த வெளியுறவுத்துறை செயலாளராக நிரூபமா ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வரும் மேனனின் பதவிக்காலம் ஜூலை 31ம் தேதியுடன் முடிகிறது.
தற்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக நிரூபமா ராவ் இருக்கிறார். ஜூலை 31ம் தேதி முதல் நிரூபமா ராவ் புதிய பணியை ஏற்றுக் கொள்வார்.
1950ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பிறந்தவர் நிரூபமா. மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கிலம் பயின்றார். பின்னர் 1973ம் ஆண்டு இந்திய அயலுறவுப் பணியில் இணைந்தார். 1976 முதல் 1983 வரை வியன்னா மற்றும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றினார். பின்னர் தென் ஆப்பிரிக்காவில் டெஸ்க் ஆபிசராக பணியாற்றினார். நேபாளத்திலும் அதே பணியை மேற்கொண்டார்.
1984 முதல் 92 வரை வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆப்பிரிக்க பிரிவில் பணியாற்றினார். அதன் பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளுக்கான மையத்தில் பணியாற்றினார். அங்கு ஆசிய, பசிபிக் பாதுகாப்பு குறித்த ஆய்வை அவர் மேற்கொண்டார்.1993 முதல் 1995 வரை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பத்திரிக்கைத் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார்.
பின்னர் 1998ம் ஆண்டு மே மாதம் வரை அவர் பெரு நாட்டுக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார்.மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 1998 ஜூன் முதல் 99 ஆகஸ்ட் வரை துணை தலைமை அதிகாரியாகப் பணியாற்றினார்.2001 முதல் 2002 வரை வெளியுறவுத்துறையின் இணைச் செயலாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.
செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை இதன் மூலம் பெற்றார். செய்தித் தொடர்பாளராக இருந்தபோது பத்திரிக்கையார்களை இவர் கையாண்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.பின்னர் இலங்கைக்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். அதன் பின்னர் தற்போது சீனத் தூதராக பணியாற்றி வருகிறார். நிரூபமா ராவின் கணவர் சுதாகர் ராவ், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.