பயங்கரவாதத்தினால் நன்மை பெற்றவர்களே இன்னும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் நாட்டில் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும் என சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். கலன் பிந்துனுவௌ, படிகார மருவ பகுதியில் வசிக்கும் 780 குடும்பங்களுக்கு இலவச மட்பாத்திரங்கள் பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடு ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தத்தின் கீழ் வடக்குப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
யார் எதைச் சொன்னாலும் எமது நாட்டில் இருந்து பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு விட்டது. இது எமக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். தற்போது எமக்கு இருக்கும் பெரும் சவால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதேயாகும்.
இதற்கான திட்டமிடல்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தையும் எம்மால் எட்ட முடியும். இதற்காக எம்மாலான உதவிகளையும் நாம் அரசுக்கு வழங்க வேண்டும்.
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அநுராதபுர மாவட்ட வாழ் மக்களுக்கு, இலவசமாக மட்பாத்திரங்கள் சுதேச வைத்தியத்துறை அமைச்சினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் அநுராதபுர மாவட்டத்தில் வாழும் எண்பதாயிரம் குடும்பங்களுக்கு மட்பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து துடைத்தெறிந்த எமது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதெனவும் அவர் கூறினார்.