மலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருகின்ற நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் சிறிய வெள்ள நிலைமை ஏற்பட்டிருப்பதாக நேற்று பிரகடனப்படுத்தப்பட்டது.
களுகங்கையின் நீர் மட்டம் 19 அடிகள் வரை உயர்ந்திருப்பதால் இம் மாவட்டத்தில் உள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதன் காரணத்தினால் இரத்தினபுரி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிறிய வெள்ள நிலைமையைப் பிரகடனப்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் பிரியந்த அபேரட்ன தெரிவித்தார். இதேநேரம், களுகங்கையின் இருமருங்கிலும் வாழும் மக்கள் திடீர் வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் : இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 9.00 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீச்சு பதிவுப்படி 120 மி. மீ. மழை பெய்திருக்கின்றது. இதனால் இரத்தினபுரி, எலப்பாத்த, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்கிறது. ஆகவே தான் சிறிய வெள்ள நிலமை பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார். இதேவேளை, காலி, மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.