பாதுகாப்பு படையினருடன் இணைந்து வெற்றிகொள்ளப்பட்டுள்ள நாட்டையும், நாட்டு மக்களையும் மீண்டும் காட்டிக்கொடுப்பதற்கு எவருக்கும் இடமளியோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், மஹிந்த சிந்தனை ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
ஸ்ரீ.ல.சு.கட்சி எப்போதும் நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னிறுத்தியே முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுத்து வந்திருக்கிறது. அதேவேளை அரசியல் அதிகாரத்தில் தொடர்ந்திருக்கும் நோக்கில் ஒரு போதும் எமது கட்சி தீர்மானங்களை எடுத்தது கிடையாது. நாடு தொடர்பாக எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் உரிய நேரகாலத்தில் எடுக்கப்படும். இவ்விடயத்தில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம்.
கடந்த காலத்தில் ஒரு குழுவாக செயற்பட்டு பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டைவிடுவித்தது போல் எதிர்காலத்தில் அபிவிருத்தி தொடர்பான சவால்களை வெற்றி கொள்வதற்காக சகலரும் ஒன்றுபட்டு பொது நோக்கில் செயற்பட முன்வர வேண்டும் என்றார்.
இவ்வைபவத்தின் போது ஸ்ரீ.ல.சு.கட்சியின் 12 புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கும், 12 புதிய மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஜனாதிபதியினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.