இந்தியப் பெருங்கடலில் நேற்று அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளான யெமன் நாட்டு விமானத்தில் பயணம் செய்த 14 வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து 142 பயணிகள் மற்றும் 11 விமானச் சிப்பந்திகளுடன் நேற்று காலை புறப்பட்ட யெமனியா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் யெமனில் தரையிறங்கி, மீண்டும் மரோனிக்கு புறப்பட்டு இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது.
விமானம் விபத்துக்குள்ளாகி நடுக்கடலில் விழுந்ததால் அதில் பயணம் செய்த எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது. இந்நிலையில் விமானம் விழுந்ததாகக் கருதப்படும் கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரான்ஸ் மற்றும் யெமன் நாட்டு மீட்புப் பணியாளர்கள் இவ்விமானத்தில் பயணம் செய்த சிறுமி ஒருவரை விமான இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டெடுத்துள்ளனர்.
இந்தச் சிறுமி, கடலில் சடலங்களுக்கும் விமானத்தின் சிதைவுகளுக்கும் மத்தியில் நீந்திக்கொண்டிருந்தபோது தான் கண்டதாக பிரான்ஸ் நாட்டு மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடும் குளிரினால் சிரமப்பட்ட இந்தச் சிறுமி கோமோரோஸ் தீவுகளிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 3 பயணிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரின் சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யெமன் குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்